பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரட்டைமணிமாலை

434

உற்பவமாலை




  
இரட்டைமணிமாலை = நேரிசை வெண்பா பத்தும் ஆசிரியவிருத்தம் பத்தும் அந்தாதித் தொடையில் அமைவது மற்றொரு வகையான இரட்டை மணிமாலை.

இருபாஇருபஃது = பத்து வெண்பாவும் பத்து அகவல்பாவும் அந்தாதித் தொடையாக அமைய இருபது பாடல்களால் பாடி முடிப்பது (உ-ம்) அருணந்தி சிவாசாரியார் பாடிய இருபா இருபஃது.



உலா = இளமையும் அழகும் வாய்ந்த தலைமகன் வீதி வழியே பவனிபோம் போது, பேதை முதலிய எழுவகைப் பருவமங்கையர் கண்டு மயங்கிக் காமுற்ற வகைகளைக் கலி வெண்பாவால் பாடுவது. (உ-ம்) திருக்கைலாய ஞான உலா.

உலாமடல் = கனவின்கண் ஒரு பெண்ணைக் கூடி இன்புற்ற ஒருதலைமகன்
விழித்தெழுந்து அத்தகையவளை மணக்க மடல் ஊர்வேன் என்று முயன்றதைக் கலிவெண்பாவால் பாடியமைப்பது.

உழத்திப்பாட்டு = கடவுள் வணக்கம் அமைய மூத்தபள்ளி, இளையபள்ளி ஆகிய இவ்விருவர்களின் வரவு, அவர்கள் பெருமை, நாட்டுவளம், மழை வேண்டித் தெய்வம் வேண்டல், மழைக்குறி கவனித்தல், ஆற்றின் வரவு, பண்ணைத் தலைவன் வரவு, அவனிடம் முறையீடு, பள்ளன் வரவு, ஆயரை வருவித்தல், மூத்தபள்ளி உணவு கொண்டுவரல், காளை வெருளல், நாற்று நடல், ஏசல், முதலான மற்றும் பல உறுப்புக்கள் அமையப் பாட்டுடைத் தலைவன் புகழ் விளங்கச் சிந்தும் விருத்தம் கலந்து வரப் பாடப்படுவது, (உ-ம்) முக்கூடற்பள்ளு.

உழிஞைமாலை = பகையரசனது ஊரின் வெளிப்புறத்தைச் சூழ உழிஞை மலரைச் சூடிப் பகைவரது மதில்புறத்தைப் படைகள் வளைத்துக் கொண்ட சிறப்பினைச் சிறப்பித்துப் பாடுவது.

உற்பவமாலை = மகாவிஷ்ணுவின் அவதாரம் பத்தினையும் ஆசிரிய விருத்தத்தால் பாடுவது.