பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிள்ளைத்தமிழ்

442

பிள்ளைத்தமிழ்




மாறு குழந்தையைக் கேட்டல். அல்லது இரு கைகளை நிலத்தில் ஊன்றி ஒருகாலின் முட்டியையும் பூமியில் ஊன்றி, ஒருகாலைப் பின்னீட்டித் தலையைத் தூக்கி அசைந்து அசைந்து ஆடுமாறு வேண்டல். இது ஐந்தாம் மாதத்தில் நிகழ்வது) 3.தால், (குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல். இது எட்டாம் மாத நிகழ்ச்சி) 4. சப்பாணி (குழந்தையை இருகைகளைச் சேர்த்துத் தட்டுமாறு வேண்டல். ஒன்பதாம் மாத நிகழ்ச்சி) 5. முத்தம் (குழந்தையை முத்தம் கொடுக்குமாறு வேண்டல், பதினோராம் மாத நிகழ்ச்சி) (6) வாரானை குழந்தையை அருகே வருக என்று அழைத்தல். இது பன்னிரண்டாம் மாத கிகழ்ச்சி (7) அம்புலி (சந்திரனை நோக்கிக் குழந்தையுடன் விளையாட வருமாறு வேண்டல். இந்தப் பருவத்தில் சந்திரனைச் சாம பேத தான தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களாலும் திறம்பட அழைக்கும் முறையில் புலவன் பாடலைப் பாடுவன். சாம்முறையில்

அழைத்தலாவது சமாதான முறைப்படி சந்திரனை அழைத்தல், பேதமுறையாவது, சந்திரனுக்குப் பாட்டுடைத் தலைவனது சிறப்பினை உணர்த்திச் சந்திரன் அச்சங்கொள்ளும் வகையில் பேதித்து அழைத்தல். தானமுறையாவது, பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வந்தால் அவனால் இந்திந்தப் பேறு கிடைக்கும் எனக்கூறி அழைத்தல். தண்ட முறையாவது சந்திரன் பாட்டுடைத்தலைவனுடன் வந்து விளையாட மறுத்தால் தண்டனை கிடைக்கும் எனக் கூறல். இது பதினெட்டாம் மாத நிகழ்ச்சி), 8.சிறுபறை (குழந்தையிடம் சிறிய பறை என்னும் வாத்தியத்தைக் கொடுத்து வாசிக்கும்படி வேண்டல். இது இரண்டாம் ஆண்டில் நிகழ்வது.) 9. சிற்றில் சிதைத்தல் (பெண்பால் குழந்தைகள் தெருவில் மணல் வீடுகட்டி விளையாடும்போது, அதனைக் கலைத்துவிடுதல், இது மூன்றாம் ஆண்டில் நிகழ்வது). 10. சிறுதோ் உருட்டல் (குழந்தைமரத்-