பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூல் அகராதி



அகத்தியம் = இது அகத்திய முனிவரால் எழுதப்பட்டது. தமிழ் இலக்கண முறைகளைப் பற்றிக் கூறுவது. ஆனால், இந்நுல் முற்றமுடிய கிடைத்திலது. அங்கங்கே உரை ஆசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட சூத்திரங்களே அறியப் படுகின்றன. இவரது காலம் முதற்சங்க காலமும், இடைச்சங்க காலமும் ஆகும்.

அகத்தியர் தேவாரத் திரட்டு = இது அகத்திய முனிவரால் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவர் பாடிய தேவாரங்களினின்றும் சிவாலய முனிவர் பொருட்டுத் திரட்டிக் கொடுக்கப்பட்ட நூல். இத்திரட்டினுள் 25 பதிகங்கள் உள்ளன. அப்பதிகங்கள் குருவருள், பரையின் (திருநீற்றின்) வரலாறு; அஞ்செழுத்து உண்மை, கோயில் திறம், சிவனுருவம், திருவடி, அருச்சனை, அடிமை என எட்டுப் பிரிவினைக் கொண்டு திகழ்வன. இதில் சம்பந்தர் பதிகம் 10, அப்பர் பதிகம் 8, சுந்தரர் பதிகம் 7 உள்ளன. அகத்தியர் இருந்த காலத்திற்கும் மூவர் முதலிகள் இருந்த காலத்திற்கும் எத்தனையோ நூற்றாண்டு இடைவெளிகள் இருப்பினும் தேவாரப் பதிகங்களுள் சிலவற்றைத் தொகுத்து அகத்தியர் தேவாரத் திரட்டு என்று கூறப்பட்டு வருதலின் குறிப்பு, அகத்தியர் என்ற பெயருடன் தேவார காலத்துக்குப் பின் இருந்த ஒருவரால் திரட்டப்பட்டுக் கொடுத்திருக்க வேண்டுமெனக் கொள்ளல் வேண்டும். அகத்தியர் சித்தர் ஆதலின் பன்னெடுங் காலம் வாழ்ந்த காரணத்தால் இங்ஙனம் திரட்டிக் கொடுத்தார் என்று கூறினும் அமையும். காலம் குறிப்பிடற்கில்லை.

அகத்தீசர் சதகம் = இந்நூல் 19-ஆம் நூற்றாண்டில் திகழ்ந்த குணங்குடி மஸ்தான் சாகிப்பு அவர்களால் பாடப்ப்பட்டது. நூறு பாடல்களைக் கொண்டது.