பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணைக் கலம்பகம்

453

அறப்பளீசுரர் சதகம்



இதனைச் சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளாா். வல்லாள மகாராசன் சரித்திாம் இந்நூலில் தான் காணப்படுகிறது. கி. பி. 17-ஆம் நூற்றாண்டு. இதன்கண் கார்த்திகை தீப வரலாற்றைக் காணலாம். இதற்கு மகாலிங்கய்யர் உரை எழுதியுள்ளார்.

அருணைக் கலம்பகம் = அண்ணாமலையார் பெயரால் பாடப்பட்ட பிரபந்தம். பல சுவைகளும் பொருந்தப் பெற்றது. சிவபரத்துவம் மிகுதியும் பேசப்படுவது. இதன் ஆசிரியர் சைவ எல்லப்ப நாவலர். காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு.

அவிரோத உந்தியார் = இது சாந்தலிங்க சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்நூலில் உள்ள பாடல் ஒவ்வொன்றும் உந்திபற என்று முடிதலின் இப்பெயர் பெற்றது. ஆர் விகுதி கொடுத்திருப்பதால் உந்தியார் எனப்பட்டது. ஞானபரமான நூல். எவர்க்கும் விரோதமற்ற முறையில் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்துவது. 100 பாடல்களைக் கொண்டது. காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு. இதற்குச் சிதம்பர சுவாமிகள் எழுதிய உரை உண்டு.

அழகர் அந்தாதி = மதுரையை அடுத்த கல்லழகர் பெருமான் மீது பாடப்பட்ட நூல். இதன் ஆசிரியர் பிள்ளைப் பெருமான் ஐயங்கார். வில்லிபுத்தூராரும் இப்பெயரால் ஓர் அந்தாதி பாடியுள்ளார். காலம் முறையே கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. 15-ஆம் நூற்றாண்டு.

அறநெறிச் சாரம் = தரும மார்க்கங்களில் சாரமானவற்றைக் கூறும் நீதிநூல். இந்நூலாசிரியர் முனைப்பாடியார். இதில் 222 வெண்பாக்கள் உள்ளன. இதில் காட்சி, ஒழுக்கம், ஞானம் என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. அருகதேவன் சிவபெருமான் என்று கூறப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு.

அறப்பளீசுரர் சதகம் = சதகம் என்பது நூறு பாடல்கள் அடங்கிய நூல். இந்நூலில் உள்ள பாடல்கள் அறப்பளீசுரதேவனே என்று