பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கேசர் வெண்பா

457

இராமாநுச நூற்றந்தாதி


இரங்கேசர் வெண்பா = இது ஒரு நீதி நூல். ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறள் அமைந்து விளங்குவது. அத்திருக்குறட்கு விளக்கம் தந்து விளங்குவது. கதைக் குறிப்பும் கொண்டது. இதனைப் பாடியவர் சாந்த கவிராயர். காலம் 18-ஆம் நூற்றாண்டு.

இரத்தினச் சுருக்கம் = இது புகழேந்திப் புலவர் பாடிய நூலாகக் கூறப்படுகிறது. வெண்பாவால் அமைந்தது. உறுப்புக்களுக்கு இன்னின்ன, உவமைகளாகக் கூறக் கூடியவை என்பதை விளக்கும் நூல். காலம் 13-ஆம் நூற்றாண்டு.

இராம நாடகம் = இராமாயணக் கதையை நாடக அமைப்பில் எழுதப்பட்ட நூல். இதன் ஆசிரியர் அருணாசலக் கவிராயர். கீர்த்தனைகள் சுவைமிக்குக் காணப்படும். காலம் 18-ஆம் நூற்றாண்டு. வாத்தியம் “தும் தம் தீந்தோம்” என ஒலித்தது என்பது துன்பம் தீர்ந்தோம் என்ற குறிப்பைக் காட்டியது என்னும் கீர்த்தனையும் இதில் உண்டு.

இராமாயணம் = தமிழில் கம்பரால் பாடப்பட்ட நூல். இதில், பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்ற ஆறு காண்டங்கள் உண்டு. இந்நூல் வடமொழிக் கதையைத் தழுவி எழுதப் பட்டதேனும், தமிழ் நாட்டின் நாகரிகத்தைச் சமயம் வந்த போது இடையிடையே புகுத்தி எழுதப் பட்டதாகும். இதன் இறுதிக் காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக் கூத்தரால் பாடப்பட்டது. காலம் 12-ஆம் நூற்றாண்டு.

இராமாநுச நூற்றந்தாதி = இது திருவரங்கத் தமுதனாரால் எழுதப்பட்டது. இராமாநுசாச்சாரியார் மீது பாடப்பட்டது. 108 கட்டளைக் கலித்துறையால் அமைந்தது. காலம் 13 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், அப்பாவு முதலியார் செய்த உரைகள் உண்டு.