பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரிபுகீதை

458

இலக்கண விளக்கம்


இரிபுகீதை = இது சிவபரத்துவம் கூறும் நூல். வேதாந்த பரமானது. இரிபு முனிவரால் நிதாகர் என்னும் முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட நூல். இதனை வட மொழியினின்று தமிழில் மொழி பெயர்த்தவர், திருவிடைமருதுார் உலோகநாத கவியாவார். காலம் 19ஆம் நூற்றாண்டு.

இருபா இருபஃது = சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று. வெண்பாவும், ஆசிரியப்பாவும், ஒன்றன்பின் ஒன்று தனித்தனி அமைய 20 பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டிருத்தலின், இப்பெயர் பெற்றது. இது திருத்துறையூர் அருள் நந்தி சிவாசாரியரால் பாடப்பட்டது. இது தமக்குச் சித்தாந்த அறிவினைத் தெளிவு படுத்திய ஆசிரியர் மெய்கண்டாரை முன்னிலைப் படுத்தி வினவுதலும், அவ் வினாவுக்கு அவர் விடை கூறுதலும் ஆனமுறையில் அமைந்து காணப்படுவது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இதற்குத் திருவாவடுதுறைமடத்து நமச்சிவாயத் தம்பிரான் உரை எழுதியுள்ளார்.

இலக்கணக்கொத்து = இதன் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர். இவரை ஈசான தேசிகர் என்றும் கூறுவர். இந்நூல் அரிய இலக்கணக் குறிப்புக்களையும் நுட்பங்களையும் அறிவிப்பது. 151 சூத்திரங்களைக் கொண்டது. வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது, காலம் 17-ஆம் நூற்றாண்டு. இது தொல்காப்பிய இலக்கண நூலினும் அருகிக் கிடந்த இலக்கண விதிகளைக் கூறுவது. வடமொழி இலக்கணங்களும் சில கூறப்பட்டுள்ளன. இதில் சொல்லிலக்கண நுட்பமும் காணப்படும்.

இலக்கண விளக்கச் சூறாவளி = இது சிவஞான முனிவரால் எழுதப்பட்ட உரை வடிவமான நூல். இது வைத்திய நாதர் தேசிகர் எழுதிய இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக எழுதப்பட்ட நூல். காலம் 18-ஆம் நூற்றாண்டு.

இலக்கண விளக்கம் = இதனைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதில் ஐந்திலக்கணங்களும் தெளிவுறக் கூறப்பட்டிருக்கின்றன.