பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இறையனார் அகப்பொருள்

460

இனியது நாற்பது


வர் இனத்தில் எழுத்தும், சொல்லும் அறிந்த புலவர்களாக இருந்தனரே அன்றிப் பொருள் இலக்கணம் அறிந்த புலவர்கள் இருந்திலர். இதன் பொருட்டுப் பாண்டியன் வருந்தினான். அவனது வருத்தம் நீங்க மதுரை ஆலவாய்ப் பெருமனார் அறுபது சூத்திரங்களைச் செப்புப் பட்டயத்தில் எழுதித் தம்பீடத்தின் கீழ் வைத்திருந்தனர். கோயில் அர்ச்சகர் அதனை எடுத்துச் சென்று , மன்னன் கையில் கொடுத்து அது கிடைத்த விதத்தைக் கூறினார். மன்னன் அதனைப் பெற்று மகிழ்ந்தான்.அதுவே இறையனார் அகப்பொருள் என்றும், களவியல் என்றும் அன்பின் ஐந்திணை என்றும் கூறப்படுவது. இதற்கு உரை கண்டார் கடைச் சங்கப் புலவர் நாற்பதின்மரும் ஆவர். மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் கண்ட உரையே சாலச் சிறந்தது. கடைச் சங்க காலம்.


இறையனார் அகப்பொருள் உரை = இஃது ஆலவாய்ச் சொக்கலிங்கப் பெருமானார் இயற்றித் தந்த களவியல் நூலுக்குப் பலர் உரை கண்டனர். அவர்களுள் கணக்காயனார் நக்கீரர் உரையே இந்நூலாகும். இதன் கண் முச்சங்கங்களின் வரலாறுகளைக் காணலாம். தூய செந்தமிழ் நடைக்கு இவ்வுரைநூல் ஓர் எடுத்துக் காட்டாகும். இது கடைச்சங்க நூல். நக்கீரர் இந்நூலுக்கு உரை கூறி வந்தபோது ஊமையாய் இருந்த உருத்திரசர்மர் கேட்டுத் தம் உணர்ச்சியினை மயிர் சிலிர்த்தல் மூலமும், கண்ணீர் சொரிதல் மூலமும் காட்டினர்.

இனியது நாற்பது = இது சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. இன்னின்னது இனிது இனிது என்று பாடப்பட்டிருத்தலின் இப் பெயர் பெற்றது. 40 இன்னிசை வெண்பாக்களை யுடையது. இதனை இனியவை நாற்பது என்றும் கூறுவர். இதனை மதுரைத் தமிழ் ஆசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் இயற்றினர். கடைச் சங்க காலம்.