பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏழாம் திருமுறை

465

ஐந்திணை ஐம்பது


ஏழாம் திருமுறை = சுந்தர மூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டது. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஏழாம் திருமுறையாக அமைந்திருத்தலால் இப்பெயர்பெற்றது. இது தோத்திர நூல். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. சிறந்த இலக்கியச் சுவை மிகுந்தது. 100 பதிகங்கள் இதில் உண்டு. 63 நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்களை முதல்முதல் அறிதற்கு இத்திருமுறையில் உள்ள பதிகம் ஒன்றே துணையாய் உள்ளது.

ஐங்குறுநூறு = சங்கம் மருவிய எட்டுத் தொகை நூற்களுள் ஒன்று. ஐந்நூறு அகவற்பாக்களால் ஆன நூல். ஐந்திணைகளைப் பற்றி அகப்பொருள் சுவை ததும்பப் பாடப்பட்டது. மருதத் திணையினை ஒரம்போகியாரும், நெய்தல் திணையினை அம்மூவனாரும், குறிஞ்சித் திணையினைக் கபிலரும், நெய்தல் திணையினை ஓதல் ஆந்தையாரும், முல்லைத் திணையினைப் பேயன் என்பாரும் தனித்தனி 100 பாடல்களால் பாடியுள்ளனர்.

59

இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். இந்நூலைத் தொகுக்குமாறு செய்தவர் யானைக்கண் சேய்மார்தரஞ் சேரல் இரும்பொறை. காலம் கடைச் சங்க காலம். இதற்குப் பழைய உரை உண்டு.

ஐந்திணை எழுபது = இது பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் அகப்பொருளைத் தழுவிய நூல். இது ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு வெண்பாக்களைக் கொண்டு திகழும் நூல். இதன் ஆசிரியர் மூவாதியார் என்பவர். கடைச்சங்க காலம்.

ஐந்திணை ஐம்பது = இது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை நெய்தல் என்ற முறை வைப்பில் ஒவ்வொரு திணைக்கும் தனித்தனி பத்து வெண்பாக்களைக் கொண்ட நூல். சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றும் உண்டு. அகப்பொருட் சுவையுடையது. இது பதினெண் கிழ்க்கணக்கு நூலைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் மாறன் பொறையனார். கடைச்சங்க காலத்தது.