பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு துறைக்கோவை

466

கச்சியானந்தருத்திரேசர்


  


ஒருதுறைக் கோவை = கோவை என்பது 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. இதில் பல அகப்பொருள் துறைகள் உண்டு. அவற்றுள் ஒன்று நாணிக்கண் புதைத்தல் என்பது. இவ்வொரு துறையின் கருத்தையே நூறு பாடல்களில் சுவைபட அமிர்த கவிராயர் பாடியுள்ள நூலே இந்நூலாகும். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு.

ஒழிவிலொடுக்கம் = இது வேதாந்த சித்தாந்த சார்புடைய நூல். கண்ணுடைய வள்ளலாரால் பாடப்பட்டது. பத்து இயல்களுடன் 253 வெண்பாக்களையுடையது. காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு. இந்நூலின் சிறப்புப்பாயிரச் செய்யுட்குத் திருவருட்பா ராமலிங்கசுவாமிகள் சிறந்த விரிந்த உரையினை எழுதியுள்ளார்.



ஒங்கார உண்மை = இது பிரணவத்தின் உண்மைப் பொருளை விளக்கும் நூல். இதில் ஓம் என்னும் ஓர் எழுத்து ஒருமொழி தமிழில் அமைந்த மொழி என்ற உண்மை தெற்றத் தெளியக் கூறப்பட்டுள்ளது. இது உரைநடை நூல். இதன் ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள். காலம் கிபி. 20-ஆம் நூற்றாண்டு.



கச்சிக் கலம்பகம் = காஞ்சி ஏகாம்பரநாதர்மீது பாடப்பட்ட பிரபந்தம். இப்பெயரால் இருவர் பாடியுள்ளனர். ஒருவர் காஞ்சி ஞானப்பிரகாசர். கிபி. 16-ஆம் நூற்றாண்டினர். மற்றொருவர் பூண்டி ரங்கநாத முதலியார் எம்.ஏ. கி.பி. 19-ஆம் நூற்றாண்டினர்.

கச்சிப் பதிற்றுப்பத்தந்தாதி = காஞ்சிபுர ஏகாம்பரநாதர் மீது பாடப்பட்ட நூறு பாடல்களைக் கொண்ட பிரபந்த நூல். இதனை இயற்றியவர் கச்சியப்ப முனிவர். காலம் கி.பி. 18 அம் நூற்றாண்டு.

கச்சி யானந்தருத்திரேசர் பதிகம் = இதன் ஆசிரியர் சிவஞான முனிவர். பத்துப் பாடல்களைக் கொண்டது. காலம் கிபி. 18-ஆம் நூற்றாண்டு.