பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலித்துறையந்தாதி

472

கலித்தொகை


நூல் சிறப்பித்துக் கூறும். இதன் மூலம் சோழர் பரம்பரையினர் வரலாற்றுக் குறிப்பைக் காணலாம். போர்க்கள வர்ணனை, பாலைநில வர்ணனை, பேய்களின் தோற்றம், அவற்றின் சேஷ்டைகள், காளிகோயில் சிறப்பு, முதலானவற்றைக் காணலாம். இது பரணி நூற்களில் சிறந்தது. காலம் கி. பி. 11 - ஆம் நூற்றாண்டு. இதில் கடை திறப்பு, காளிக்குக் கூளி கூறியது, கூளிக்குக் காளி கூறியது, களம் பாடியது முதலான தலைப்புக்கள் உண்டு. இதில் 596 தாழிசைகள் உள்ளன. ஒவ்வொரு தாழிசையையும் புலவர் பாடிப் பொருள் விரித்தபோது கேட்ட குலோத்துங்க சோழன் ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டி புலவரைச் சிறப்பித்தான் என்பர்.

கலித்துறையந்தாதி = இது சுந்தரர் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்ட சிவனடியார்களைப் பற்றித் தனித்தனிக் கலித்துறையாப்பில் பாடித் துதி செய்த நூலாகும். இந்நூல் சேக்கிழார் பெரிய புராணம் பாடுதற்குப் பெருந்துணை செய்தது. இதனால் இந்நூல் பெரிய புராணத்திற்கு வழி நூல் என்று கூடக் கூறப்படுகிறது. பெரிய புராணத்தை நோக்க இது வகை நூலாகவும் உள்ளது. இதனைப் பாடியவர் நம்பியாண்டார் நம்பிகள். இந்நூல் சைவத் திருமுறை 12னுள் 11 வதாகத் திகழும் பெருமையுடையது. காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு.

கலித்தொகை = ‘கற்றார் ஏத்தும் கலி’ என்னும் சிறப்புப்பெற்ற நூல். இது சங்கம் மருவிய எட்டுத் தொகைகளுள் ஒன்று. 150 கலிப்பாவால் இயன்றது. அகப்பொருள் சுவைமிக்க ஐந்திணைகளைப் பற்றிய செய்திகளை அறிவிப்பது. பாலைக் கலியினைப் பெருங்கடுங்கோனும், குறிஞ்சிக் கலியினைக் கபிலரும், மருதக் கலியினை மருதன் இளநாகனும், முல்லைக் கலியினைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தல் கலியினை நல்லந்துவனாரும் பாடியுள்ளார். இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் நல்லந்துவனார்.