பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழுக்குன்றப் புராணம்

474

காசிக் கலம்பகம்


எழுதியுள்ளார். இந்நூலாசிரியர் சங்ககாலப் புலவரா, அன்றி வேறானவரா என்பது ஆராய்தற்குரியதாக இருக்கிறது. ஆகவே, காலத்தை வகுக்க இடமில்லை.

கழுக்குன்றப் புராணம் திருக்கழுக்குன்றத் தலத்தின் வரலாற்றைக் கூறுவது. அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் பாடப்பட்டது. இதன் மூலம் அங்கு வந்து தினமும் சர்க்கரைப் பொங்கலை உண்டு செல்லும் இரு கழுகுகளின் வரலாற்றை அறியலாம். மலையின் மாண்பையும், தீர்த்த விசேடத்தையும், தலத்தின் பெருமையையும் அறிய இந்நூல் துணை புரியும்.

கழுமல மும்மணிக் கோவை = சீர்காழிப் பதியின் மீது பட்டினத்தடிகளால் பாடப்பட்ட நூல். கழுமலம் என்பது சீர்காழிக்குரிய பெயர்களில் ஒன்று. 30 பாடல்களைக் கொண்டது. பதினேராம் திருமுறையில் இணைக்கப்பட்டது. காலம் கி. பி. 10-ஆம் நூற்றாண்டு. இது தோத்திர நூல்.

களவழி நாற்பது = சோழன் செங்கணான், சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிட்டனன். இச்சிறையினின்றும் விடுதலை செய்யப் பொய்கையார் என்னும் புலவர் இந்நூலைப் பாடினார். இந்நூல் 41 வெண்பாக்களைக் கொண்டது. இதில் செங்கணான் வீரம், போர்க்கள இயல்பு முதலியன அழகுறப் பாடப்பட்டுள்ளன. காலம் கடைச்சங்க காலம்.

கா

காக்கை பாடினியம் = இது யாப்பு இலக்கண நூல். காக்கை பாடினியார் என்பவர் ஆசிரியர். யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக எடுத்தாளப் பட்ட நூல். காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு.

காசிக் காண்டம் = இது காசியின் மான்மியத்தை அறிவிக்கும் நூல். அதிவீரராம பாண்டியர் இதனைப் பாடினார். கங்கை யாற்றின் மாண்பை இதில் அறியலாம். ஆசாரம், கற்பு முதலானவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இதில் உண்டு. காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு. புராண வகையைச்சார்ந்த நூல்.

காசிக் கலம்பகம் = குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்டது. காலம் கி.பி. 17