பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குற்றாலத் தலபுராணம்

480

கைந்நிலை


  
குற்றாலத் தலபுராணம் = திரிகூட ராசப்பக் கவிராயரால் பாடப்பட்டது. காலம் கி. பி. 18ஆம் நூற்றாண்டு. இதன் வாயிலாக அங்குள்ள நீர்வீழ்ச்சிகளின் அருமை பெருமைகளையும், அந்நீர் வீழ்ச்சிகள் தோன்றும் மலைகளின் வளங்களை நன்கு உணரலாம். இந்நூலில் உள்ள நாட்டு வளனும் நகரவளனும் படித்து இன்புறுதற்குரியவை. இந்நூலில் கற்பனை மிகுதியும் உண்டு .
 

கூ


கூர்ம புராணம் = அதிவீரராம பாண்டியர் என்பவரால் இயற்றப்பட்டது. இதன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. இதனை வரதுங்க பாண்டியர் இயற்றினார் என்றும் கூறுவதுண்டு. இது சைவ பரத்துவம் கூறும் நூல்களில் ஒன்று.

கூவப் புராணம் = கூவம் என்பது கூவரம் என்னும் சொல்லேயாகும். கூவரமாவது தேரின் ஏர்க்கால். சிவபெருமான் திரிபுரம் எரித்தபோது, அமர்ந்திருந்த தேரின் ஏர்க்கால் இத்தலத்தில் உடைந்த காரணத்தால் இப்பெயர் பெற்றதென்பர். இது போன்ற வரலாறுகள் பல இதில் கூறப்பட்டுள்ளன. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் பாடப்பட்டது. காலம் கி. பி. 17ஆம் நூற்றாண்டு.

கூளப்பநாயக்கன் காதல் = இது ஒரு சிற்றின்ப நூல். இதில் தாசிகளின் சாகசம் இன்னின்ன என்பன விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. தாசிகளின் சேர்க்கையால் ஏற்படும் துன்பங்களும் இதில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. படிக்கச் சுவை தருவது. இதன் ஆசிரியர் அட்டாவதானி சுப்பிரதீபக் கவிராயர். காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு.

கை


கைந்நிலை = இதனைப் பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று என்பர். இந்நூலாசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதி நூல்வகையைச் சார்ந்தது. இது கடைச்சங்க காலத்து நூல்.