பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிதம்பர மும்மணிக் கோவை

487

சித்தாந்த வசன பூஷணம்


காலம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு.

சிதம்பர மும்மணிக் கோவை = முப்பது பாடல்களைக் கொண்ட நூல். சைவசித்தாந்த கருத்துடைய நூல். குமரகுருபர சுவாமிகளால் எழுதப்பட்டது. காலம் கி. பி. 17-ஆம் நூற்றாண்டு. இது தோத்திர நூல்.

சித்தாத்த சாத்திரம் = சைவசித்தாந்த சார்பான 14 நூற்களின் தொகுதியே சித்தாந்த சாத்திரம் எனப்படும். இதுவே மெய்கண்ட நூல் என்னும் கூறப்படும் சிறப்பு வாய்ந்தது. இத்தொகுப்பில் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது. உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிக்கலி வெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை விளக்கம், சங்கற்ப நிராகரணம் அடங்கியுள்ளன. பதி, பசு, பாசங்களை பற்றிய குறிப்புக்கள், பஞ்சாட்சர மாண்பு, சுத்தாத்துவித சைவசமய மேம்பாடு முதலானவற்றை அறியத் துணைசெய்யும் தொகுப்பு நூல். இப்பதிநான்கு நூற்களையும் ஒன்று சேர்த்துத் தருமபுர ஆதீனத்தார் வெளியிட்டுள்ளார்.

சித்தாந்த சிகாமணி = சுத்தாத்துவிதமாகிய சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட சிறந்த நூல். இதன் ஆசிரியர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. இதே பெயரைக் கொண்ட நூல் அம்பலவாண தேசிகர் என்பவராலும் இதே நூற்றாண்டில் பாடப்பட்டுள்ளது.

சித்தாந்த பிரகாசிகை = சைவசித்தாந்த உண்மைகளை வடமொழியில் எழுதப்பட்ட நூல். இதன் ஆசிரியர் சர்வான்ம சம்பு சிவாசாரியார். இதனைச் சிவஞான சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு.

சித்தாந்த வசன பூஷணம்= சைவசித்தாந்த கருத்துக்களை வசன நடையில் எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் நிலையில் எழுதப்பட்ட நூலாகும். ஆசிரியர் பூவை கலியாணசுந்தர முதலியார்