பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுபாணாற்றுப்படை

492

சின்னூல்


  
களுள் ஒன்று. பஞ்சமூலம் என்பன கண்டங்கத்தரி, சிறுமல்லி, சிறுவழுதுணை, நெருஞ்சி, பெருமல்லி ஆகிய ஐந்தன் வேர்கள். இவற்றின் சேர்க்கையால் அமையும் மருந்து நோயினைப் போக்க வல்லது. அதுபோல இந்நூலில் உள்ள வெண்பாக்கள் ஒவ்வொன்றும் ஐந்து சீரிய கருத்துக்களைக் கொண்டு நன்மை தர வல்லது. இதில் 105 வெண்பாக்கள் இருந்தனவாகக் கருதப்படுகிறது. ஆனால், ஐந்து செய்யுள்கள் இடையில் குறைந்து காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் மாக்காயனார் மாணக்கர் காரியாசான் என்பவர். கடைச்சங்க காலம்.

சிறுபாணாற்றுப்படை = சங்கம் மருவிய பத்துப்பாட்டில் இது ஒன்று இது ஏறுமா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்டது, கடைஏழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்களையும் இதில் காணலாம். 299 அடிகளுடைய பாடல். நல்லியக்கோடன் புலவர்க்கும், பொருநர்க்கும், அந்தணர்க்கும் என்றும் அடையா வாயில் உடையவன்; என்றும் செய்நன்றி அறியும் குணமும், இன்முகம் உடைய பண்பும், அஞ்சினர்க்கு ஆதரவு தரும் இயல்பும், எண்ணியதை ஈடேற்றும் ஆற்றலும் உடையவன்; இன்னோரன்ன குறிப்புக்கள் இதில் உள்ளன. பாணர்களுள் சிறுபாணர் பெரும்பாணர் என இருவர் உளர். அவர்களுள் சிறிய இனிய ஓசையுடைய யாழினைக் கொண்ட பாணனை ஆற்றுப்படுத்திப் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. காலம் கடைச்சங்க காலம். தமிழ் நாட்டுப் பண்பை அறிய இது துணை செய்யும் இலக்கியம்.

சின்னூல் = இது நேமிநாதம் என்னும் இலக்கண நூலுக்கு அமைந்த மற்றொரு பெயர். வெண்பாவால் எழுத்திலக்கணம், சொல் இலக்கணங்களைக் கூறும் நூல். காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு. ஆசிரியர் குணவீர பண்டிதர்.