பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

501



எழுதப்பட்ட விரிவுரை நூல். பாஷ்யம் என்பதே மாபாடியம் என்று ஆனது. இந்நூல் பயிற்சியினால் தருக்கம், இலக்கணம், காவியம், சாத்திரம், சித்தாந்தம், ஆகமம் ஆகிய இவற்றின் நுட்பங்களை இனிதின் உணரலாம். இத்தகைய அரிய உரையை எழுதியவர் சிவஞான முனிவர் ஆவர். காலம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் = இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆங்கில நூலாயினும் தமிழர் யாவரும் படிக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இதன் குறிப்பும் இங்கு எழுதப்படுகிறது. இந்நூல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலான மொழிகளின் இலக்கணங்களை அலசித் தமிழ் இலக்கணத்தோடு ஒத்திட்டுக் காட்டி, அம்மொழிகளுக்கும் தாயகம் தமிழ்மொழி என்னும் குறிப்பை நன்கு அறிவிக்கும் நூலாகும். தமிழ் வடமொழியின் துணையின்றி என்றும் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என்பதையும், இவ்வாறு தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகள் இருக்க இயலாது என்பதையும் தெற்றத்தெளிய அறிவிக்கும் நூலாகும். இந்நூலால் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் சென்று சேர்ந்துள்ளன என்பதையும் நன்கு அறியலாம். இந்தகைய அரிய சீரிய நூலை எழுதித்தந்தவர் ரெவரெண்ட் கால்டுவெல் துரைமகனார் ஆவார். காலம் கி. பி. 19 ஆம் நூற்றாண்டு. இந்நூலின் கருத்தைத் தழுவிப் பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன.

திரிகடுகம் = பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று கூட்டு மருந்துகளின் சேர்க்கையால் உடற்பிணி போவது போன்று அறியாமையாகிய நோய் நீங்க ஒவ்வொரு பாடலிலும் உள்ள மும்மூன்று நீதிகள் துணைபுரியும். அதனால் தான் இது திரிகடுகம் எனப்படுகிறது. இந்நூலைப் பாடியவர் கல்லாதனார் என்பவர். காலம் கடைச்சங்க காலம்.