பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டார மும்மணிக்524பதிற்றுப்பத்து




ணமும் தெளிவாகக் கூறப் பட்டிருப்பது படித்து இன்புறுவதற் குரியனவாகும். இந்நூலைப் பாடியவர் காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.

பண்டார மும்மணிக் கோவை = மூன்று மணிகள் கோக்கப்பட்ட மாலை போல் மூன்று பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைய, முப்பது பாடல்களைக் கொண்ட நூலே மும்மணிக் கோவையாகும். அம்மூன்று பாடல்கள் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்பன. குமரகுருபரர் இதன் ஆசிரியர். குமரகுருபர சுவாமிகள் திருச்செந்தூர் முருகப் பெருமானை நோக்கித் தமக்கு ஞானாசிரியரை நாடித் தருதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதுபோது செந்தில் பெருமான், ‘அன்ப! உனது வாக்கு யாரிடம் தடைபடுகிறதோ, அவரே உனது ஞானாசிரியர் ஆவார்’ என்று கூற, சுவாமிகள் அந்த ஆணையைச் சிரமேற்கொண்டு ஞானாசிரியரை அடைய வேண்டுமென்ற நாட்டத்துடன் இருக்கையில், திருத்தருமை ஆதின குருமகா சந்நிதானமாக அவர் காலத்தில் விளங்கிய ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிகரை வணங்கும் பேறு சுவாமிகளுக்குக் கிட்டியபோது, திருமகா சந்நிதானம் பெரியபுராணத்திலுள்ள 'ஐந்து பேரறிவு' என்னும் திருப்பாடலுக்கு அனுபவப் பொருளைக் கூறுமாறு பணித்தார். குமரகுருபரர் கூற இயலாது நின்றார். அதன்பின் மகா சந்திதானம் அதன் பொருளை விளக்கினார். அதனைக் கேட்ட சுவாமிகள் செந்தில் முருகப் பெருமானது கட்டளையைக் கூறி அவருக்கு ஞானப் புத்திரராக ஆயினர். அந்தச் சந்தர்ப்பத்தில் பாடப்பட்ட நூலே இந்நூல். சைவசித்தாந்தத்தின் மேன்மை சிறப்புற இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இதன் காலம் கி. பி. 17 ஆம் நூற்றாண்டு.

பதிற்றுப்பத்து = இது சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. சேரநாட்டு மன்னர்களைப் பற்றியும், அவர்களின் நாட்டைப் பற்றியும் அறிதற்குப்