பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணுடை வள்ளலார்

572

கபிலர்


யார். இவரது நூல் திணை மொழி ஐம்பது.

கண்ணுடை வள்ளலார் = இவர் காழிகண்னுடைய வள்ளலார் எனப்படுவார். சைவத்துறவி. சீர்காழியில் வாழ்ந்தவர். இவரது நூல் ஒழிவில் ஒடுக்கம். அத்துவைதக் கலிவெண்பா, சித்தாந்த தரிசனம் முதலியன. 18 ஆம் நூற்றாண்டு.

கதிரைவேற் பிள்ளை = யாழ்ப்பாணத்தில் புலோலியூரில் பிறந்தவர். சைவ வேளாளர். வடமொழி, தென்மொழி பயின்றவர். நல்ல சொற்பொழிவாளர். அட்டாவதானம் சதாவதானம் செய்த அறிஞர். இவர் கூர்ம புராணத்திற்கும் பழனித் தலபுராணத்திற்கும் உரை எழுதியுள்ளார். சிவாலய மகோற்சவ விளக்கம். சைவசித்தாந்தச் சுருக்கம் முதலியனவும் இவர் எழுதிய நூற்கள். கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

கந்தசாமிப் புலவர் = திருப்பூவணத்தில் சைவ மரபில் உதித்தவர். அத்தலத்தைப் பற்றிப் புராணம், உலா, வண்ணம் முதலிய நூற்களைச் செய்தவர். ஆப்பனூர்ப் புராணம் பாடியவரும் இவரே. 17 ஆம் நூற்றாண்டு.

கந்தப்பையர் = முனிவரின் மாணவர். திருத்தணிகை வாசி.வீர சைவ மரபினர். இவர் தணிகையைப் பற்றி உலா, அந்தாதி, கலம்பகம் அனுபூதி முதலான நூற்களைப் பாடியவர் பழமலை அந்தாதி, செந்தில் நிர் ஒட்டக அந்தாதிகளுக்கு உரை எழுதியவர். இவர் பெற்ற பிள்ளைகளே விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் என்பவர்கள். இவ்விருவர் களும் சிறந்த புலமை யுடையவர்கள் கி. பி. 18 ஆம் நூற்றாண்டினர்.

கந்தியார் = இவர் வைணவர். பெண்பாற் புலவர், திருக்குருகூருக்கு அருகுள்ள திருப்பேரையில் பிறந்தவர். சிந்தாமணியிலும், பரிபாடலிலும் பாடல்களைப் பாடிச் சேர்த்தவர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டினர்.

கபிலர் = கடைச்சங்க காலத்தவர். திருவாதவூரில் பிறந்த அந்தணர். இவர் சேரன் செல்வக் கடுங்கோ வாழி ஆதனைப் பாடி நூறாயிரம் பொன்னும், வளநாடும்