பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிவப்பிரகாச சுவாமிகள்

587

சிவாக்கிர யோகிகள்


புலவர். வீர சைவ மரபினர். இவர் வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றவர். கற்பனைக் களஞ்சியம் என்றும் சிறப்பித்துப் பேசப்படுபவர். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவை பிரபுலிங்க லீலை, நால்வர் நான்மணி மாலை, சோணசைல மாலை, வெங்கைக் கலம்பகம்,வெங்கைக் கோவை, நிரோட்டக யமக அந்தாதி, சித்தாந்த சிகாமணி, வேதாந்த சூடாமணி, பெரியநாயகி கலித்துறை, தர்க்க பரிபாஷை, நன்னெறி, ஏசுமத நிராகரணம், திருக்கூவப் புராணம், திருக்காளத்தி புராணத்தில் இரண்டு சருக்கங்கள் முதலியன. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருவீழிமிழலையில் படிக்காசு பெற்ற வரலாற்றை நான்மணி மாலையில் குறிப்பிடும்போது,"ஞான சம்பந்தர் பிராம்மணப் பிள்ளையாதலின் பிறர் கொடுக்க வாங்கத் தகும்; கொடுக்கும் குலமாகிய வேளாளர் குலத்தில் பிறந்த நீங்கள், வாங்கத் தகுமா?" என்று அப்பரை வினவும் வினா வேளாளர் மேம்பாட்டை உள்ளத்தில் வைத்து இவர் பாடியுள்ளது சிந்தித்தற்குரியது. காலம் 17ஆம் நூற்றாண்டு.

சிவவாக்கியர் = இவர் தாயுமானவரால் குறிப்பிடப்பட்ட பெருமை சான்றவர். இவரை ஒரு சித்தர் என்பர். இவர் பாடல்கள் சித்தர்கள் பாடிய பாடல்களைக் கோவைப்படுத்தி வெளியிட்டுள்ள நூலில் காணலாம். நாடிப் பரீட்சை என்னும் நூலும் இவரால் செய்யப்பட்டது என்பர். இவரது காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.

சிவாக்கிர யோகிகள் = இவர் சூரியனார் கோயில் ஆதினத் தலைவர். இவர் சிறந்த சைவநூற் புலவர். சரபோசி மகாராசர் காலத்தவர். மணவாள முனிவருடன் வாதம் புரிந்து வென்றவர். இவர் பல நூல்களைச் செய்தவர். வடமொழியிலும் வல்லவர். இவர் இயற்றிய நூற்கள் சைவ சந்நியாச பத்ததி, வடமொழிச் சிவஞான போத சங்கிரக வியாக்கியானம், சைவ பரிபாஷை, சுருதி சூக்தி மாலை, தமிழ் உரை, சித்தாந்த தீபிகை, வேதாந்த