பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

592


தடிகள் இறைவனை வேண்டச் அச் சிறையினின்றும் நீக்கப் பெற்றவர். பின்னர்ச் சிதம்பரத்தில் விறகு விற்று வாழ்ந்தவர். இவரைத் திருவீழிமிழலையில் இருந்தவராகவும் கெளணிய கோத்திரத்தார் எனவும் கூறுவர். ஏறன் என்ற பெயரும் இவருக்கு உண்டு என்பர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு.

சேரமான் கணக்கால் இரும்பொறை = இவர் சேரமன்னர். சோழன் செங்கணானால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை புகுந்தவர். சிறந்த மானி. தம் மானத்தைக்காக்க உயிரைவிட்டவர். தாம் சிறைபட்டிருந்த சிறைச்சாலைச் சேவகனை நீர் வேண்ட, அவன் கொணர்ந்த காரணத்தால் அந்நீரைப்பருகாது உயிர்விட்டவர். கடைச்சங்க காலத்தவர். இவரது பாடல் புறத்தில் ஒன்று உண்டு.

சேரமான் பெருமாள் = இவர் பொறையன் என்பானின் திருமகனாராகக் கொடுங்கோளுரில் பிறந்தனர். இவர் மாக்கோதையார் என்னும் பெயரும் உடையவர். இவர் சேரநாட்டைச் சார்ந்த ஊருக்கு மன்னரானமையின் சேரமான் பெருமான் எனப்பட்டார். இவர் சுந்தரருடைய நண்பர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பாடிய நூற்கள் திருக்கைலாயஞான உலா பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை முதலியன. காலம் 9ஆம் நூற்றாண்டு. இவர் தாம் அரசு நடத்துகையில் எல்லா உயிர்களின் பேச்சையும் அறிந்து அவற்றிற்கு நன்மை செய்யவேண்டி, அவை கூறியவற்றை அறிந்து வந்த காரணத்தால், கழறிற்று அறிவார் என்ற பெயரையும் பெற்றவர்.

சேணாவரையர் = "ஆனாப் புலமை சேனாவரையர்" என்று சிறப்பிக்கப் பட்டவர்.தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்குச் சிறந்த உரை கண்டவர். வடமொழிப் புலமையும் உடையவர். பாண்டிய நாட்டு ஆற்றூரில் சேனைத் தலைவர் குடும்பத்தினர். கி.பி. 13ஆம் நூற்றாண்டினர், இவர் அந்தண மரபினர் என்றும் கருதப்படுவர்.