பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நச்சினார்க்கினியர்

600

நமச்சிவாய முதலியார்


அடிநூல், நக்கீரர் நாலடிநானூறு முதலான நூல்களைப் பாடினதாகவும் கூறுவர். சைவத் திருமுறைகளில் காணப்படும் கைலைபாதி காளத்திபாதியந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக் கோவை, பெருந்தேவபாணி, திருவெழுக்கூற்றிருக்கை, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முதலானவையும் இவர் பாடினவாகக் கூறப்படுகின்றன. சிவபெருமான் பாடிக்கொடுத்த பாடல் ஒன்றில் குற்றம் கூறியதால் குட்ட நோய் வரப் பெற்றுப் பின்னர் அவரைத் துதித்து அதனின்றும் நீங்கினர் என்பர். மேலே கூறிய தனி நூல்களே அன்றி, அகத்தில் 19, குறுந்தொகையில் 8, நற்றிணையில் 7, புறத்தில் 3, திருவள்ளுவமாலையில் ஆக 38 பாடல்கள் உள.

நச்சினார்க்கினியர் = இவர் தலைசிறந்த உரையாசிரியர் "உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர்" என்று சிறப்பித்துக் கூறப்படுபவர். பாரத்துவாச கோத்திரத்தினர். மதுரையில் பிறந்தவர். அந்தண மரபினர். சைவ சமயத்தினர். தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி என்னும் நூற்களுக்கு உரை எழுதியவர். கி.பி.14 ஆம் நூற்றாண்டு.

நஞ்சீயர் = இவர் உரையாசிரியர். திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்னும் உரை எழுதியவர். வைணவ சமயத்தவர். திருப்பள்ளிஎழுச்சிக்கும், கண்ணினுண் சிறுதாம்பு என்னும் பாக்களுக்கும் உரை எழுதியவர். கி.பி.13 ஆம் நூற்றாண்டு.

நமச்சிவாய தேசிகர் = இவர் திருவாவடுதுறை ஆதினத் தம்பிரான் ஆவார். வினாவெண்பா, இருபா இருபஃது, சிவஞான சித்தியார் சுபக்கம் ஆகிய நூற்களுக்கு உரை எழுதியவர். கி.பி. 15ஆம் நூற்றாண்டு.

நமச்சிவாய முதலியார் = இவர் காவேரிப்பாக்கத்தவர். சைவ மரபினர். தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். இளைஞர்கட்கும் முதியவர்க்கும் பயன்படும் வண்ணம்