பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்திரகிரியார்

605

பரணர்


தொகுத்தவர். அதற்கு உரையும் கண்டவர். நாலடியாரை அறம் பொருள் இன்பம் என முப்பிரிவுபடுத்தி அதிகார அடைவும் தந்தவர். காலம் கி. பி. 9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பத்திரகிரியார் = இவர் அரச மரபினர். பட்டினத்தார் தொடர்பு ஏற்பட்டபின் அவரோடு துறவியாகவே தொடர்ந்தவர். அவருக்குத் திருத்தொண்டு புரிந்தவர். இவர் பாடிய நூல் பத்திரகிரியார் புலம்பல் எனப்படும். இவரோடு இருந்த நாய் இவரும் இவரது ஞானாசிரியர் பட்டினத்தாரும் உண்ட மிச்சிலை உட்கொண்டதனால் காசிராசன் மகளாகப் பிறக்கும் பேறு பெற்றது. பின்னர்ச் சோதியில் கலந்து முத்தி பெற்றது. காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. வடமொழியுணர்ந்த பத்திரகிரியார் இவரினும் வேறாவார்.

பரஞ்சோதி முனிவர் = இவர் திருமறைக்காட்டுச் சைவ வேளாள மரபினர். மதுரை மடத்தில் தம்பிரானாராக இருந்தவர். வேதாரண்யத்தில் அபிடேகப் பொருள்களைத் தயாரிக்கும் திருத்தொண்டு புரிந்ததாகவும் கூறுவர். தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சமய சாத்திர நூல்களையும் நன்கு பயின்றவர். வடமொழியிலும் வல்லவர். இவர் எழுதிய நூற்கள் திருவிளையாடற் புராணம், வேதாரண்ய புராணம், மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி முதலியன. கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

பரணர் = இவர் கடைசி சங்க காலத்தவர். கபிலரின் நெருங்கிய நண்பர். கடல்பிறக்கோட்டிய செல்கெழு குட்டுவனைப் பாடி உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகனையும் பரிசிலாகப் பெற்றவர். இவர் சேரனையே அன்றிச் சோழனையும். பேகன் என்னும் வள்ளலையும் பாடியவர். இவர் பாடின பாடல்கள் அகத்தில் 34, குறுந்தொகையில் 10, புறத்தில் 13, திருவள்ளுவ மாலையில் 1, உள்ளன. இவையே அன்றிப் பதினோராம் திருமுறையில் உள்ள பாடல்கள் பல இவர் பெயரால் அமைந்துள்ளன. இது ஆராய்ச்சிக்கு உரியது.