பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

616

மாறோக்கத்து முள்ளி


வலை மேற்கொண்டவர். இவர் அஞ்ஞானம் தமிழ் மறை விளக்கம், தமிழ் அலகைத் தொடர் முதலான நூற்களை எழுதியவர். கி.பி.19 ஆம் நூற்றாண்டினர்.

மாணிக்கவாசகர் = இவர் சைவ சமயாசிரியர் நால்வருள் ஒருவர். மூவர் முதலிகளான அப்பர். சம்மந்தர் சுந்தரருக்கு முற்பட்டவர். இதனை இவர் பாடியுள்ள திருவாசகத்தில் விநாயகரைப் பற்றி எந்தவித குறிப்பும் கூறாமை கொண்டும் பல்லவர்களைப் பற்றியும் குறிப்பிடாமை கொண்டும், கண்ணப்பர் சண்டேசுரர் ஆகிய பழைய அடியார்களை மட்டும் குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியலாம். மற்றும் பல காரணங்கள் உண்டு. கி.பி. 3ஆம் நூற்றாண்டினர். திருவாதவூரில் ஆமாத்திய பிராமணர் வகுப்பில் சம்புபாதாசிரியரின் புதல்வர். மதுரை அரிமார்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர். திருப்பெருந்துறையில் ஆலயம் கட்டியவர். அத் தலத்தின் குருந்த மரத்தடியில் இறைவனால் ஞானோபதேசம் பெற்றவர். தில்லையில் முத்தி பெற்றவர். ஊமைப் பெண்ணைப் பேசவைத்தவர். இவர் பொருட்டு இறைவர் குதிரைச் சேவகராக வந்தார். நரிகளைக் குதிரைகளாக்கினார். வைகையில் நீர் பெருகச் செய்தார். மண்சுமந்து பிரம்படியும் பட்டார். இவர் பாடிய நூற்கள் திருவாசகம், திருக்கோவையார் என்பன.

மாமூலனார் = இவர் கி.மு.3 ஆம் நூற்றாண்டினர். சிறந்த யோகியார். இவர் மோரியர் படை எடுப்பைப் பற்றியும், நந்தர்கள் தம் செல்வத்தைக் கங்கையாற்றில் மறைத்து வைத்தனர் என்பதைப் பற்றியும் அகத்தில் பாடியுள்ளார். இக் குறிப்புச் சரித்திர ஆராய்ச்சிக்கு மிகவும் உதவவல்லது.

மாறன் பொறையனார் = கடைச்சங்க காலத்தவர். ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர்.

மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர் காவிதியார் மகனார் புல்லங்காடனார் = இவர் கடைச்சங்க காலத்தவர். கைந்நிலை என்னும் நூலின் ஆசிரியர்.