பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

624


ஸ்ரீ

ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் = இதுபோது காஞ்சி காமகோடி பீட ஆசாரிய சுவாமிகளாக விளங்குபவர். அரியசீலர். வடமொழியும் தென்மொழியும் நன்கு அறிந்தவர். பல இடங்கட்குக் கால்நடையாகவே செல்லும் தூய துறவு ஒழுக்கம் மேற்கொண்டவர். இவரது அரும் பெரும் கருணையினால் தான் சைவர்களும் வைஷ்ணவர்களும் ஒன்று சேர்ந்து திருவெம்பாவையையும் திருப்பாவையையும் பற்றி எங்கும் பேசவும், மாநாடுகளைக் கூட்டவும் நேர்ந்தது. இந்த அரிய செயலை எவரும் இதற்கு முன் செய்ததில்லை. எவர்க்கும் தரிசனம் தந்து தண்ணருள் சுரப்பவர். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் = இவர் திருவாடுதுறையினது ஆதின குருமகா சந்நிதானமாக இருந்து அடியார்கட்கு அருள் புரிந்து வருபவர். சைவ நூற்புலமையும் தமிழ் அறிவும்மிக்கவர். இவர்கள் சைவசித்தாந்த சாத்திரங்கள் யாவற்றையும் உரையுடன் வெளியிட்டு, அவற்றை இலவசமாகத் தக்கார்க்கு ஈந்து சைவ சமயத்தைப் பரப்பி வருபவர். திருமந்திர மாநாட்டை ஆண்டுதோறும் கூட்டித் திருமந்திரக் கருத்துக்களைப் பேசுமாறு செய்து, திருமந்திர நூற் கருத்துக்களை எழுதுமாறு செய்து, அவற்றை வெளியிட்டு உபரித்து வருபவர். புலவர்கட்குத் தகுதி அறிந்து ஈயும் மாபெரும் கொடையாளி யாவார். அண்மையில் இவர்களின் உத்தரவுப்படி வெளிவந்துள்ள கணபதியைப் பற்றிய நூல் கண்ணையும் கருத்தையும் கவரும் ஒரு சிறந்த நூல். பல பெயர்களைப் பெற்ற விநாயகப் பெருமானின் திருவுருவங்கள் இந்நூலில் அழகுடன் திகழ்கின்றன. அந்தந்த விநாயகரைப் பூசிக்கும் முறை அதனால் அடையும் பயன் முதலியன அழகுற இதில் எழுதப்பட்டுள்ளன. கி.பி.20ஆம் நூற்றாண்டு.