பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேவநேயப்பாவாணர்

643

நமச்சிவாய முதலியார்


அரசாங்கத்தைச் சார்ந்த கல்லூரிகளில் கணிதப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்று, இப்போது புதுக் கல்லூரியில் பிரின்ஸ்பாலாக இருந்து தொண்டு செய்பவர். சோதிடப் புலமை மிக்கவர். சோதிட சம்பந்தமான நூலையும் எழுதியவர். கட்டுரைகளையும் எழுதியவர். வடமொழியில் உள்ள எழுத்துக்களும் தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களும் ஒலிவடிவில் மட்டும் இன்றி வரிவடிவிலும் ஒற்றுமையுடையன என்பதை வற்புறுத்தி வருபவர். நம் முனிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்த காலங்களை வானநூல் ஆராய்ச்சி முறைப்படி நிலைநிறுத்திக் காட்டுபவர். காலம். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

தே

தேவநேயப்பாவாணர் = இவர் சேலம் முனிசிபல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து வருபவர். கிறித்தவச் சமயத்தவர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். இலக்கண இலக்கிய அறிவில் சிறந்தவர். தமிழ் நாட்டுச் சரித்திரங்களை நன்கு பயின்றவர். தனித்தமிழ் ஆர்வம் படைத்தவர். தருக்கம், உளநூல் போன்ற கலைகளும் தமிழில் உண்டு என்பதை நன்கு எடுத்துக்காட்டும் அறிவு படைத்தவர். பல கட்டுரைகளை வரைந்தவர். இவரது ஆராய்ச்சி வன்மையையும், தமிழ்ப் பற்றையும், பன்னூல் புலமையையும் இவர் எழுதியுள்ள ஒப்பியல் மொழி நூலில் நன்கு காணலாம். காலம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

நமச்சிவாய முதலியார் = இவர் சென்னை அரசினர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். இவர் இளஞ்சிறார் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பயிலுதற்கு ஏற்ற நூல்களை எழுதியவர். பிருதுவிராஜன் என்னும் நாடக நூலை இயற்றியவர். தனித்தமிழ் வித்துவான் பட்டத்திற்கு மன்றாடி வெற்றி கண்டவர். உபகாரச் சிந்தையுள்ளவர். கி. பி. 20ஆம் நூற்றாண்டு.