பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழ் இலக்கிய வரலாறு


அக்காலத்து ஆட்சிப்போக்கினையும் மொழிப்போக்கினையும் உணர்த்தும். இதேபோல் அளவுக்கு மீறிய வடசொற்களும் கலந்திருக்கக் காணலாம். 1088க்கு மேற்பட்ட சந்த வேறுபாடுகளை 1307 பாடல்களில் காணலாம் என்று இசை வல்லார் கூறுவர். முதன் முதல் சந்தப்பாவைப் புதிய முறையில் கையாண்டவர் இவரே எனலாம். இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

இவரை 'வாக்கிற்கு அருணகிரி' என்றும், 'கருணைக் கருணகிரி' என்றும் புலவர் பாராட்டியுள்ளனர். தாயுமான தயாபரரும், 'ஐயா அருணகிரி, அப்பா உனைப் போல - மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்?' என்று வியந்து பாராட்டுகின்றார்.

கந்தர் அந்தாதி என்னும் யமக அந்தாதி இவர் இயற்றியதாகும். இது திருவண்ணாமலையில் பாடப் பெற்றிருக்க வேண்டும் என்பர். நூற்றிரண்டு செய்யுள்கள் கொண்ட கந்தர் அலங்காரம் என்னும் நூல், பக்திச்சுவை மிக்கதொரு நூலாகும். இவர் நூலாம் கந்தர் அநுபூதி மிகச் சிறப்பு வாய்ந்த நூல். இதனைத் தாயுமான சுவாமிகள்,

'கந்தரநுபூதி பெற்றுக் கந்தர நு பூதி சொன்ன

 எந்தை யருள்நாடி யிருக்குநாள் எந்நாளோ!'

என்று சிறப்பித்துள்ளார். இது கடவுள் வாழ்த்துடன் கலிவிருத்தத்தால் அமைந்த ஐம்பத்திரண்டு செய்யுள்களைக் கொண்டது. இதனைப் பெரியோர் மந்திர நூலாகக் கொள்வர். ஆறுமுகப் பெருமானின் அருள் வேண்டுவோர் நாடோறும் பாராயணம் செய்துவரும் சிறப்பினையுடையது இந்நூல். பதினெட்டு வகுப்புக்கொண்டு பதினெட்டுச் சந்த விருத்தங்களால் ஆன நூல் திருவகுப்பாகும். இதில் முருகப் பெருமானுடைய பெருமையும் அருளும் பேசப்பட்டுள்ளன.