பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

தமிழ் இலக்கிய வரலாறு


பள்ளு : இலக்கணம்

'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென மொழிப் புலனுணாந் தோரே'

என வரும் தொல்காப்பியனார் கூற்றுக்கு, 'வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் விளங்குவன புலனென்னும் செய்யுளாம்' என்று இளம் பூரணரும் 'அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன வென்பதும் கண்டு கொள்க' எனப் பேராசிரியரும் விளக்கம் கண்டுள்ளதனை நோக்கப் பள்ளு என்னும் சிற்றிலக்கிய வகைக் கூறு, தொல்காப்பியனார் காலத்திலேயே கருக்கொண்டுள்ளது என்பதனை அறியலாம்.

சிலப்பதிகாரத்தில் பள்ளு இலக்கியத்திற்குரிய கூறுகள் காணப்படுகின்றன. உழத்தியர் பாட்டு, எயினர் பாட்டு, ஆயர் பாட்டு, குன்றவர் பாட்டு முதலியன இளங்கோவடிகளால் இலக்கியச் சிறப்புடன் எடுத்து மொழியப்படுகின்றன.

'புரவலர் கூறியவன் வாழிய வென்று
அகவயல் தொழிலை யொருமை யுணர்ந்தனன்

எனவரும் ஈரைந்து உழத்தி பாட்டே'

எனவரும் பன்னிரு பாட்டியல் நூற்பா, 'உழத்தி பாட்டு' என்பது. உழத்தி ஒருத்தி உழவுத் தொழிலை வாழ்த்தியும் அரசனைப் புகழ்ந்தும் பாடும் பத்துப் பாடல்களால் ஆகிய ஒருவகைச் சிற்றிலக்கியமாகும் என்பதனைக் குறிப்பிடுகின்றது. எனவே உழத்தி பாட்டு வேறு, பள்ளுப்பாட்டு வேறு என்பது விளங்கும். ஆயினும், பள்ளுப் பாட்டின் வளர்ச்சிக்கு உழத்தி பாட்டின் பொருளமைதி வேண்டப்பட்டதனை ஆராய்ச்சிக் கண் கொண்டு நோக்கினால் அவை புலனாகக் காணலாம்.