பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

301


தாலும், உள்ளடக்கத்தாலும் பல்வேறு கோலங்களைப் பெற்றுத் துலங்குகிறது. மனிதன் இயற்கைவாழ்வு நடாத்திய சங்க காலம் தொட்டு, இயந்திரங்களோடு இயைந்து வாழும் இக்காலம் வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவருகிறது. அவ்வக்காலக் கவிதை உலகில் மேலோங்கி நின்ற கருப் பொருட்களை விளக்கும் வண்ணம் அமைந்த காதல் கவிதை, நீதிக்கவிதை, அருட்கவிதை, கதைக்கவிதை, கைக்கிளைக் கவிதை, போற்றிக் கவிதை, தேசியக் கவிதை, கிராமியக் கவிதை, புதுக்கவிதை முதலிய பல்வேறு கவிதைகள் வரலாற்றில் கவிதைக்கலை பெற்ற மாற்றத்தை வளர்ச்சியை உணர்த்தி நிற்கின்றன. இவற்றில் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து ஈண்டுக் காண்போம்.

புதுக்கவிதை என்றால் என்ன?

'சொற்சிக்கனம், பேச்சுப்பாங்கு, பேச்சமைதி, புதுமைப் படிமப் பயன்பாடு (பிரயோகம்), தற்காலச் சொல்லாட்சி' உணர்ச்சிப் பாங்கு, தத்துவ நோக்கு, ஒலிநய அழுத்தம், உடனிகழ் கால உணர்வு, இன்றைய இக்கட்டான நிலை இவற்றைத் தன் உள்ளடக்கத்துக்கும், உருவத்திற்கும் பொருளாகவும், சாதனங்களாகவும் கொண்டு புதுக்குரலில் ஒலிப்பதுதான் இன்றைய புதுக்கவிதை' எனப் புதுக்கவிதை பற்றி உரைக்கின்றார் திரு. சி. சு. செல்லப்பா. சங்கக்கவிதைகள், பக்தி இயக்கம், காவிய காலம் என்று வசதிக்கேற்பப் பாகுபடுத்திக் கொண்டமையை ஒட்டிப் பாரதிக்குப்பின்னர்த் தோன்றியுள்ள ஒரு திருப்பத்தை உணர்த்தவே புதுக்கவிதை என்ற சொற்பிரயோகம் 1910க்குப் பிறகு, இங்கிலாந்து அமெரிக்காவில், தோன்றிய New Poetry என்ற சொல்லின் மொழி பெயர்ப்பாகத் தோன்றியது என்றும், தமிழில் புதுக் கவிதைக்கு வித்திட்டவர் பாரதிதான் என்றாலும், இன்று அது ஒரு திருப்பம் அடைந்து சமதன்மை உண்டாக்கிச் சுயரூபம் பெற்று இருக்கிறது என்றும் குறிக்கின்றார்.