பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

தமிழ் இலக்கிய வரலாறு


முன்னைய கவிதை மரபுகளைப் பின்பற்றி வரும்போது, அம் மரபுகள் போதாத நிலையில் புதிய மரபுகள் தோன்றி அவ்வக்காலத்தின் தேவைகளை நிறைவு செய்வது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக இருந்து வருகிறது. புதுக் கவிதை மரபும் அத்தகையதே என்பது அறிஞர் கருத்து.

புதுக்கவிதையின் தோற்றம்

இருபதாம் நூற்றாண்டை உரைநடையின் பொற்காலம் எனலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மருத்துவம், நாடகம், சோதிடம் முதலிய அனைத்துத்துறைகளிலும் செய்யுளே தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது. செய்யுள் நடை செல்வாக்குப் பெற்றிருந்த அந்தக் காலத்தில் உரைகளிலும்கூட எதுகை மோனை முதலிய அமைப்புகள் காணப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வரவால் நாடெங்கும் அச்சுக்கூடங்கள் தோன்றலாயின. ஒரு சிலருக்கு மட்டும் என்றிருந்த கல்வி எல்லோர்க்கும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே எல்லோர்க்கும் விளக்கமான செய்யுள் நடை விடைபெற்று உரைநடை இடம் பெற்றது. இந்நிலையில் தம் சமயத்தைப் பரப்பவந்த ஐரோப்பியப் பாதிரிமார்கள் உரைநடையில் தம் சமயப் பிரசாரங்களை எழுதத்தொடங்கினர். பின்னர் அதனை வசன நடையில் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் சமயப்பிரசாரத்திற்காக எழுந்த உரைநடை எல்லாவித இலக்கியங்களையும் ஆட்சி செய்யத் தொடங்கியது. சிறு கதை, புதினம் முதலான இலக்கியத் துறைகள் வசனத்தின் ஆளுமையைப் பெற்றன. இவற்றின் தொடர்ச்சியாகக் கவிதைத் துறையிலும் வசனம் தன் ஆதிக்கத்தைப் படர வைத்தது. பழங்காலத்தில் செய்யுள் செல்வாக்குப் பெற்றிருந்தபோது, எவ்வாறு உரைநடையில் அது தன் செல்வாக்கைக் காட்டியதோ அது போன்று உரைநடை செல்வாக்குப் பெற்றபோது அது தன் செல்வாக்கைக் கவிதையில் காட்டத் தொடங்கியது. இதன் வெளிப்பாடே வசன கவிதை