பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

307


தக்கதல்ல, அதற்கு விடுதலை கொடுத்துவிடுவோம்' என்று நயம்படக் கூறும் கான், 'வரிகளின் தொடக்கங்களில் தொடர்ந்து உண்டாக்கப்படும் மணியோசையின் நாதத்தை (அ) எல்லாச் சந்தத்தை நிறுத்திவிடுவோம். சந்தம் ஓரிடத்திற்கு மட்டும் சொந்தமல்ல. அது எல்லாச் சத்தத்துக்கும் சொந்தம். சந்தத்தில் சப்த மயக்கம் மட்டும் இல்லை; அதில் சலன விழிப்பும் வேண்டும்' எனப் புதிய கோணத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். கான் கூறும் இக் காரணங்களையே இருபதாம் நூற்றாண்டின் புதுக் கவிதைக்கும் கூறவேண்டிய நிலை உள்ளது. பாரதிதாசன் பரம்பரை என்று அழைக்கப்படும் கவிஞர்களின் படைப்புகளில் ஒரே மாதிரியான உருவ உள்ளடக்கங்கள் இடம் பெற்றன. உருவத்தின் கட்டுக்கோப்புக்கு யாப்பு முதலிடம் கொடுக்கப்பட்டுச் சிறப்பிக்கப் பெற்றது. உருவத்திற்கு மட்டுமே சிறப்புக் கொடுக்கப்பட்டதால், செய்யுளே மிகுதியாகத் தோன்றியது. புதுக் கவிஞர்கள் பலர் தம்முடைய தனி மனித அனுபவத்திற்கும் சமூக அனுபவத்திற்கும் வடிகாலைத் தேடியபோது, யாப்பு அவர்களைப் பின்னுக்குத் தள்ளியது. எனவே, தமிழ் ஆசிரியர்கள் மட்டுமே தமிழ்ப் புலவர்களாகச் செய்யுள் இயற்றிக் கொண்டிருந்தனர்.

தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் பாரதி. ஓருலக மனப்பான்மையையும், பொதுவுடைமைக் கோட்பாட்டையும், அறிவியல் முறையில் கவிதையில் புகுத்தியவர் இவரே. இவர்தம் கவிதா ஆளுமை தேசியத்திலிருந்து சர்வதேசியத்திற்கும் கொண்டு சென்றது. பாரதிக்குப்பின் இந்தியத் தேசியத்திலிருந்து தமிழ்த்தேசியத்திற்குத் தமிழ்க் கவிதை தன்னளவில் சுருங்கியது. இதனால் தமிழ்க் கவிதை நாளுக்குநாள் மெலிவடைய, தேவையற்ற தேக்கம் உண்டானது. தமிழ், தமிழினம், இயற்கை, காதல், பெண்விடுதலை, தனிமனிதத் துதி என்று கூறுகள் பிரித்துத் தமிழ்க் கவிதைகள் படைத்த