பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

தமிழ் இலக்கிய வரலாறு


பாரதிதாசன் பரம்பரையினர் இரு கிளையாகப் பிரிந்தபோது நா. காமராசன், இன்குலாப், சிற்பி, தமிழன்பன், மீரா போன்றோர் தேக்கத்தைத் தகர்த்தெறிந்தனர்.

கி.பி. 1910இல் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் புதுக்கவிதை முயற்சி தொடங்கியது. 1910-18 என்ற இடைவெளியில் தமிழ்நாட்டில் பாரதியின் வசன கவிதை முயற்சி வளர்ந்தது. 1930க்குப் பின்னர்ப் பாரதியின் வழியில் ந. பிச்சமூர்த்தி, கு ப.ரா., வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன் ஆகியோர் தொடர்ந்து வளர்த்தனர். 1930-40 என்ற காலவெளியில் கிராம ஊழியன், சிவாஜி, எழுத்து போன்றவை புதுக்கவிதையைப் போற்றி வளர்த்தன. அண்மைக் காலத்தில் 'எழுத்து' நின்றுவிட்ட போதிலும் நடை, கசடதபற, வானம்பாடி, அஃ ஆகிய இதழ்கள் தொடர்ந்து பல புதுக் கவிதைகளையும் புதிய தமிழ்க் கவிஞர்களையும் அறிமுகப்படுத்திப் பரப்புகின்றன. புதுக் குரல்கள், பால்வீதி, கனவுகள், கற்பனைகள், காகிதங்கள், விதி, அன்று வேறு கிழமை, உதய நிழல், தமிழ் நாட்டின் கவிதைகள், தமிழன்பன் கவிதைகள், வைகறை முதலிய புதுக்கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. இவையே அன்றிக் கதம்பம், அலைகள், புள்ளி, வெண்மை, உதயம், ரசிகன், நீ முதலிய குட்டிக் கவிதைத் தொகுப்புகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

புதுக்கவிதையும் வசனகவிதையும்

புதுக்கவிதைக்கும் வசன கவிதைக்கும் உள்ள ஒற்றுமை கள் : 1. வசனகவிதை, புதுக்கவிதை யாப்பு இல்லாதவை. 2. எதுகை, மோனை இயைபுத்தொடைகள் அற்றவை. இசை ஆதிக்கத்தைவிட வசன ஆதிக்கத்திற்கு இடம் தந்து நிற்பவை. இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள் :