பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

தமிழ் இலக்கிய வரலாறு


5. புதுக்கவிதை எளிதில் புரிவதில்லை.

6. குறியீடு தெரியாவிடின் புதுக் கவிதைகளைச் சுவைக்க முடியாது.

7. கண்காட்சிக் கவிதை கவிதைகளே அல்ல எனக் புதுக்கவிதையை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். பொதுவாக நோக்கும்போது உள்ளடக்கம், உருவம், உணர்த்துமுறை ஆகியவை புதுக்கவிதையில் ஒழுங்காக அமையவில்லை என்பதே இவர்கள் கருத்தாகக் காணப்படுகிறது.

கவிதையின் உருவம்

யாப்பு வாலாற்றை நோக்கும்போது, யாப்பு என்பது நிலைபேறு உடையது அல்ல என்பதும், காலத்திற்கேற்ற கோலங்கொள்ளும் தன்மை மிக்கது என்பதும் புலனாகும். யாப்பு வரலாறு பொதுவாக வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, இவற்றின் இனங்கள், கட்டளைக் கலித்துறை, சிந்து, கண்ணி, களிப்பு. சீர், தளை முதலான புதுப்புது வடிவங்களைக் கொண்டு திகழ்கிறது. இவற்றை நோக்கும்போது யாப்பு என்பதில், காலத்தின் போக்கிற்குத் தகப் புதுப்புது உருவங்கள் தோன்றும் என்பதும் தெளிவாகிறது. எனவே, இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் அறிவியலும், அச்சியலும் தோன்றிய காலத்திற்கேற்பப் புதிய உருவங்களைப் படைத்துக் கொண்டதில் தடை ஒன்றுமில்லை.

மேலும், ஒரு கவிதையின் வெற்றி என்பது அதன் உணர்த்தும் முறையிலேயே அமைகின்றது; உருவத்தில் அன்று. எனவே, பழைய கால யாப்பு வடிவம் இல்லை என்பதால் புதுக் கவிதைகளைப் புறக்கணிக்க இயலாது.

புதுக் கவிதைகளில் ஒலி நயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. தமக்கே உரிய சில ஏற்றத் தாழ்வுகளை இவை பெற்றிருக்கின்றன.