பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

தமிழ் இலக்கிய வரலாறு


முதுகு வளர
நீ
ண்
டு
விட்ட
கூந்தலுக்கு
மேலும் வளரத்
துடிதுடிப்பென்ன

என்ற எஸ். வைத்தீஸ்வரனின் 'ஆசை' என்ற கவிதை கண்காட்சிக் கவிதைக்குச் சிறந்ததோர் காட்டு.

பாட்டி செத்த பத்தாம் வினாடி
பெரிய குழப்பம் -
பிணத்தை எரிப்பதா புதைப்பதா என்று....
உள்ளுர்ப் புலவர் ஓடி வந்தார்
பட்டி மன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று

வெற்றுப் பட்டி மன்றங்களின் சொற் குப்பை கூளங்களை நன்றாகவே கிண்டல் செய்கின்றது, மீராவின் 'ப(ா)ட்டி மன்றம்'.

உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இருந்த காலம் போய், இன்று உணர்த்துமுறைக்கு ஒரு காலம் வந்துள்ளது. புதுக்கவிதைகளில் உணர்த்தும் முறை உள்ளடக்கத்திலிருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி செறிவாகப் பிணைந்து கிடக்கிறது. உணர்த்து முறையைப் புதுக் கவிதை உயிராகப் போற்றுகிறது.

புதுக் கவிதையும் பேச்சு வழக்கும்

'சுதந்திரம்' என்ற தலைப்பில்

இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே யில்லை