பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

329


மாகும்.[1] தொல்காப்பியத்தில் 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்று வரும் தொடர் கொண்டு, அக் காலத்தில் தமிழ் நாடகம் இருந்திருக்கவேண்டும் என அறிகிறோம். சிலப்பதிகாரத்தின் உரையில் அடியார்க்கு நல்லார், 'நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இருந்தன' என்று கூறியுள்ளார். இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்சமரபு, பரதசேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ்நூல் முதலிய நூல்கள் அக்காலத்தில் வழங்கி இறந்து பட்டிருக்கவேண்டும் என்பது உணரக்கிடக்கின்றது. அதன் பின்னர்ப் பௌத்த சமணர் இடையீட்டால் இடைக் காலத்தில் நாடகங்கள் காமக்கிளர்ச்சியை வளர்ப்பன என்ற கருத்துப் பரவி, நாடகத் தமிழ் தேய்பிறையானது. இராசராச சோழன் காலத்தில் இராசராசேசுவர நாடகம் கோயில்களில் நிகழ்த்தப்பட்டது என்பதும். நாடகம் நடிப்பவர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன என்பதும் சாசனங்களால் அறியக்கிடக்கின்றன. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அருணாசலக் கவியின் இராம நாடகம், திரிகூடராசப்பக் கவிராயரின் 'குற்றாலக் குறவஞ்சி'. என்னயினாப் புலவரின் 'முக்கூடற் பள்ளு', கோபாலகிருஷ்ண பாரதியாரின் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை' முதலியன மீண்டும் நாடகத் தமிழுக்குப் புத்துயிர் அளித்தன. நாடகக்கலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவிச் செழித்தது. பின்னர்ப் புராண சம்பந்தமான நாடகங்கள் தோன்றின. அரிச்சந்திர நாடகம், மார்க்கண்டேயர் நாடகம், சிறுத்தொண்டர் நாடகம், அல்லி நாடகம், பவளக்கொடி நாடகம், கிருஷ்ணன் தூது நாடகம் கோவல நாடகம், காத்தவராயன் நாடகம், இராவண சம்ஹார நாடகம் முதலிய நாடகங்கள் நாடக மேடையில் நடிக்கப்பட்டுப் பொதுமக்களால் பாராட்டப்பட்டன.


  1. திரு. பி. சம்பந்த முதலியார் - நாடகத் தமிழ் - மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர். ப. 137.