பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

தமிழ் இலக்கிய வரலாறு


கற்பனை வாழ்க்கை அமைதல் வேண்டும்.......... கூடியவரையில் ஆசிரியர், தமக்கு நன்கு தெரிந்த வாழ்க்கைப் பகுதிகளையும் இடங்களையும் அமைத்தே நாவல் எழுதுதல் நல்லது. [1] |

மேலை நாட்டார் தொடர்பால் தோன்றிய இந் நாவல் துறை சென்ற நூற்றாண்டின் இறுதியில் சிறப்புடன் தொடங்கியது. மாயூரத்தில் முனிசீப் வேலை பார்த்த வேதநாயகம் பிள்ளையவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தமிழ் நாவல் தொடங்குகின்றது. இந் நாவல் வெளி வந்த காலம், கி. பி. 1879 ஆம் ஆண்டாகும். அடுத்து. இவர் எழுதிய 'சுகுண சுந்தரி கதை' (1887) புதினத்தின் பல கூறுகள் கொண்டுள்ளது. 1865 இல் சித்தி வெவ்வை மறைக்காயர் முகமது காசிம் என்னும் இலங்கை வாசி எழுதிய 'அசன்பேயுடைய கதை' தமிழின் இரண்டாவது நாவலாகவும், இலங்கையின் முதல் தமிழ் நாவலாகவும் திகழ்கிறது. 1893 ஆம் ஆண்டில் ஸூ. வை. குருஸ்வாமி சர்மா என்பவர் 'பிரேம கலாவத்யம்' என்னும் குடும்பச் சூழ்நிலை கொண்ட நாவலை எழுதினார். 1893 இல் அ. மாதவய்யா எழுதத் தொடங்கிய 'சாவித்திரி சரித்திரம்' அரைகுறையாய் நின்றுவிட்டது. 'பிரபுத்த பாரத' என்னும் ஆங்கில வேதாந்த பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த ராஜமையர், கமலாம்பாள் சரித்திரத்தை இதே காலத்தில் (1896) வெளியிட்டார். வத்தலக்குண்டில் இருபத்தாறே ஆண்டுகள் வாழ்ந்து இளமையிலேயே மறைந்த இவருடைய நாவலில், மனித வாழ்வும் தத்துவமும் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பினைப் பார்க்கலாம். இந்நாவலில் வரும் தலைவர் முத்துசாமி ஐயர்; தலைவி கமலாம்பாள். அடுத்து இந் நாவலில் வரும் தமிழ் வித்துவான் அம்மையப்பப் பிள்ளை மறக்கமுடியாத ஒரு பாத்திரமாவர். 1894 ஆம் ஆண்டு 'தானவன்' என்னும் நாவலை எழுதிய பண்டித ச. ம. நடேச சாஸ்திரி, 1900 ஆம் ஆண்டில் 'தீனதயாளு' எனும் நல்லதொரு நாவலை


  1. டாக்டர் மு. வ. இலக்கிய மரபு-பக்கம், 113.114.