பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

தமிழ் இலக்கிய வரலாறு


எழுதக்கூடியவர். வை. மு. கோதைநாயகி அம்மாள் அக்காலப் பெண் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராவர். இவர் எழுதிய நாவல்கள் மிகப் பலவாகும். பெண்ணின் மன ஆழத்தை விளக்குவனவாகவும், வாழ்வின் துன்பப் பகுதிகளைத் தொடுவனவாகவும் இவர் நாவல்கள் அமைந்துள்ளன. இவர் நாவல்களுள் சில திரைப்படமாயின.

ரெயினால்ட்ஸ் எழுதியதொரு நாவலை மறைமலையடிகள் 'குமுதவல்லி அல்லது நாக நாட்டரசி' எனத் தமிழில் நாவலாகத் தந்தார்.

கல்கி

கல்கி அவர்களைத் தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்டு (Walter Scott) என்பர். சுவையாகக் கதையை வருணித்துச் செல்வதில் இவருக்கு நிகர் இவரே. தமிழ் நாட்டில் தொடர்கதை படிக்கும் ஆர்வத்தினையும் வேகத்தினையும் ஊட்டியவர் இவரே ஆவர். இந் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளரான இவர் தொடக்கத்தில் 'கள்வனின் காதலி', 'தியாக பூமி' எனும் நாவல்களைத் தொடர் கதைகளாக எழுதினார். பின்னர் வீணை பவானி, மகுடபதி, சோலை மலை இளவரசி முதலிய நாவல்கள் வெளிவந்தன. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பெற்ற சுவையான புதினம் 'அலையோசை' ஆகும். இது சாகித்திய அகாதமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. இவர் இறுதியாக எழுதிய புதினம் 'அமரதாரா' என்பது. இவரால் தொடங்கப்பட்ட இப் புதினம் இவர் மகளார் ஆனந்தியால் முடிக்கப்பட்டது.

தமிழில் வரலாற்றுப் புதினங்களை முதன் முதல் சிறக்க எழுதிப் பின் வந்தோர்க்கு வழிகாட்டியாய் விளங்கியவர் கல்கியே. இத் துறையின் தந்தை இவரே. முதலில் இவர் எழுதிய வரலாற்றுப் புதினம் (Historical Novel) 'பார்த்திபன் கனவு' ஆகும். பல்லவரின் சிறந்த காலத்தைச் சித்திரிக்கும் மற்றோர் அற்புத நாவல் 'சிவகாமியின் சபதம்'. இந் நாவலில்