பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

தமிழ் இலக்கிய வரலாறு


சமுதாய நாவல்கள்

டாக்டர் மு. வ.

இத் துறையில் ஈடு இணையற்ற புகழ்பெற்றவர் டாக்டர் மு. வ. அவர்களே ஆவர். இவருடைய நாவலைப் படிப்போர் மனத்தூய்மை பெறுவர். சங்க இலக்கியத்தின் சாரமான கருத்துகளை எல்லாம் இவர் நாவலில் காணலாம். தூய தமிழ் நடையில் இவர் நாவல்கள் அமைந்திருக்கும். மங்கை, தேன்மொழி, மலர்விழி, அல்லி, அறவாழி, அருளப்பன், மணி முதலிய தூய தமிழ்ப் பெயர்கள் இவர் நாவல்களில் இடம்பெற்ற பின்னரே, பலரும் இத்துறையில் - பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கும் துறையில் இவரைப் பின்பற்ற முனைந்தனர். 'பாவை' தொடக்ககால நூல். “அந்த நாள்” பர்மாவிலிருந்து தமிழர் ஓடிவந்த நிகழ்ச்சியினை அவலந்தோற்ற வருணிக்கின்றது ‘செந்தாமரை’ ஓர் உயரிய இலக்கியப் படைப்பு. ஒழுக்கத்தில் வழுக்கி விழுவோர்க்கு எச்சரிக்கை தரும் நாவல் 'அல்லி'. 'கயமை' ஒரு புரட்சிப் படைப்பு. நாவலின் தலைப்பே புரட்சி அன்றோ. 'மலர் விழி' பண்பைப் பறைசாற்றும் நாவல். 'கரித்துண்டு' மேலை நாட்டுப் படைப்புகளோடு ஒப்பிடத் தக்கது. 'நெஞ்சில் ஒரு முள்' நாவலின் தலைப்பு மட்டுமல்ல, நாவலைப் படித்து முடித்த நாம் பெறும் அனுபவமும் அஃதே. 'வாடாமலர்' இது வரை இவர் எழுதிய நூல்களில் இறுதியானது. 'அகல் விளக்கு' சாகித்திய அகாதெமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்ற நாவலாகும் . 'கள்ளோ ? காவியமோ?' என இவர் எழுதிய புகழ்பெற்ற நாவல் பலரின் இல்வாழ்விற்குத் துணைகோலி உரமூட்டியுள்ளது. நெஞ்சைத் தொடும் நல்ல நாவல் 'பெற்ற மனம்'; அது திரைப்படமாகவும் வந்தது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமுதாய நாவல் எழுத்தாளராகத் திகழ்ந்தவர் டாக்டர் மு. வ. அவர்களே ஆவர்.

சமுதாய நாவல்களில் தேவன் எழுதிய 'மிஸ்டர் வேதாந்தம்' தனியிடம் பெறத்தக்கது. வ. ரா. வின் ‘சுந்தரி’