பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

355


நல்ல வரவேற்பைப் பெற்ற நாவலாகும். விந்தனின் ‘பாலும் பாவையும்' புரட்சியான நாவல். அப்பட்டமான வாழ்வியல் உண்மைகள் இதில் அலைமோதுகின்றன. அகிலனின் 'நெஞ்சின் அலைகள்' சுவையான நவீனம். குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. 'பிரம்மச்சாரி' 'காதலெனும் தீவினிலே' 'நீ'. 'சொல்லாதே', 'ஓவியம்' என்னும் நாவல்களை எழுதியுள்ளார். இவற்றில் சிறந்த இடத்தினைப் பெறுவது 'காதலெனும் தீவினிலே' எனும் நாவலாகும். இந் நாவலில் வரும் காதலர்கள் ராதாவையும் வசந்தனையும் நாம் எளிதில் மறக்க இயலாது. 'கலைமணி' என்னும் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய மிகவும் உயர்ந்த நாவல், 'தில்லானா மோகனாம்பாள்'. நாட்டிய ராணி மோகனா, நாதசுரக் கலைஞன் சண்முகசுந்தரம், வடிவாம்பாள், வைத்தி என்றும் பாத்திரங்கள் வாழும் கீர்த்தியுடையன. பி. எம். கண்ணனின் "நாகவல்லி' 'முள்வேலி' 'நிலவே நீ சொல்' என்பன நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல்களாகும். சோமுவின் 'நந்தவனம்'. ஆர்வியின் 'அணையா விளக்கு' ரஸவாதியின் * ஆதார சுருதி', நா. பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்' "பொன்விலங்கு', மாயாவியின் 'அன்பின் ஒலி', க. நா. சுப்பிரமணியத்தின் 'ஒரு நாள்', கி. ராஜேந்திரனின் 'நெஞ்சில் நிறைந்தவள்'. பி. வி. ஆரின் 'தங்கம்', கோவி. மணிசேகரனின் 'தென்னங்கீற்று', 'தவமோ? தத்துவமோ?' கு. ராஜவேலுவின் 'காதல் தூங்குகிறது' 'மகிழம்பூ'. ஜெகசிற்பியனின் 'சொர்க்கத்தின் நிழல்', ரா. கி. ரங்கராஜனின் 'இது சொர்க்கம்' 'வயது பதினேழு' 'படகு வீடு', தமிழ்வாணனின் 'மணிமொழி நீ என்னை மறந்து விடு', தி. ஜானகிராமனின் “ அம்மா வந்தாள்' 'மரப்பசு' என்பன இன்றைய சிறந்த சமுதாய நாவல்களாகும்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் இராஜ அரியநாயகம் (தங்கப் பூச்சி), அருள் செல்வநாயகம் (பாசக்குரல்), செ. கணேசலிங்கம் (நீண்ட பயணம்), 'நந்தி' எனும் புனைபெயர் கொண்ட செ.சிவஞான சுந்தரம் (மலைக்கொழுந்து) என்போர் ஆவர்.