பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

தமிழ் இலக்கிய வரலாறு


குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவர் திருமதி இந்துமதி. எழுத்தாளர் என்னும் நிலையிலிருந்து உயர்ந்து 'அஸ்வினி' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் சில மாதங்கள் பணியாற்றினார். இவர் நடையில் ஆங்கிலச் சொற்களையும் சொற்றொடர்களையும் அதிகமாகப் பயன்படுத்துகிறார். சில இடங்களில் ஆங்கிலத் தொடர்களை ஆங்கிலத்திலேயே எழுதிவிடுகிறார். இவர் நாவல்களில், 'தரையில் இறங்கும் விமானங்கள்', 'யார்?', 'சக்தி 81' ஆகியன சிறந்தவை.

புதுமை நாவல்கள் சில

தமிழ் நாவல்களுக்குப் பொதுவாக இருக்கும் போக்கை மாற்றிப் புதிய கோணத்தில் எழுதப்பட்ட சில நாவல்கள், தமிழ் நாவல் இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்துள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே அறிவது பயனுடையது.

புத்தம் வீடு

இதை எழுதியவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் திருமதி ஹெப்சியா ஜேசுதாசன். கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலுக்கு அருகேயுள்ள பனை விளை என்னும் கிராமத்தையும், பனையேறிகளின் தொழிலையும் சூழலையும் இயல்பாய் விளக்குகிறது இந்த நாவல். குலப்பெருமை பேசும் கண்ணப்பச்சி என்றும் கதாபாத்திரம் மிகச் செம்மையாக, நெஞ்சில் நிறைந்து நிற்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. கண்ணப்பச்சியில் தொடங்கி மூன்று தலைமுறையின் கதை நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் சுவை ததும்பச் சொல்லப்பட்டுள்ளது. 1964 இல் வெளியான இந்த நாவல் நடையாலும் கதையாலும் ஒரு புதுமைப் புதினமாகப் போற்றப்படுகிறது. ஆசிரியர் ஹெப்சியா ஜேசுதாசனின் முதல் நாவல் இது. முதல் நாவலிலேயே, ஓர் எழுத்தாளன் அடையவேண்டிய முழுப் புகழையும் அடைந்துவிட்டார் .