பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

தமிழ் இலக்கிய வரலாறு


கள். சம்பிரதாயங்கள் முதலியவற்றைக் கற்பனை கலவாது உள்ளது உள்ளபடி ஆசிரியர் அமைத்துச் செல்கிறார். இதுவும் நாகர்கோயில் பக்கத்து வட்டார வழக்கில் எழுந்த நாவலே. கவிஞர் மீரா 'இந்த நூற்றாண்டின் இதிகாசம்' என்று தலைமுறைகள் நாவலைப் புகழ்கிறார். இந்நாவலின் சிறப்பைக் கண்டே, திறனாய்வாளரான க. நா. சுப்பிரமணியம் இதை Generation என்னும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

கோபல்ல கிராமம்

பொருளுக்காகவோ, புகழுக்காகவோ எழுதாமல் ஆத்ம திருப்திக்காகவே எழுதும் எழுத்து வேந்தராக மதிக்கத்தக்கவர் கி. ராஜநாராயணன், 'கிடை', 'கரிசல் காட்டில் ஒரு சம்சாரி' என்னும் இரு குறு நாவல்களும் இவரது அருந்திறனைப் பறைசாற்றும். இவர் வழங்கிய 'கோபல்ல கிராமம்' நாவல், கம்மவார் என்னும் தெலுங்கர்கள் ஆந்திரத்தை விட்டுத் தமிழ் நாட்டில் குடியேறியதை விளக்கும் சமூக வரலாற்று நாவலாக அமைந்துள்ளது.

கோட்டையார் வீடு என்னும் புகழ்பெற்ற வீட்டையும், அந்த வீட்டைச் சார்ந்தோர் முதலில் சொந்த நாட்டை விட்டு வந்த கதையையும், திருடர்களை அவர்கள் ஒருமுறை விரட்டி வென்ற தந்திரத்தையும், வீரத்தையும், கம்மாளப் பெண்ணைக் கொன்றவனைக் கழுவேற்றும் நீதி விசாரணையையும், ஆங்கிலேயர் வருகையால் ஊரின் சுதந்தரம் பறிபோக, விடுதலை உணர்வு தோன்றுவதையும் இந்நாவல் கூறுகிறது. பல கதைகள் இருப்பினும், அவை ஓர் அடிமரத்திலிருந்து எழுந்த பல கிளைகளைப் போல ஒட்டி உறவாடி ஒரு நாவல் என்னும் தன்மையைத் தருகின்றன. ராஜ நாரயணனின் இந்த நாவலில் எந்த நிகழ்ச்சியைப் படித்தாலும், அதை எதிரே பார்ப்பது போன்ற உணர்வு எழும். அத்தகைய அற்புதமான நடையிலே எழுதிய கோபல்ல கிராமம்