பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

365


1976 இல் வெளிவந்து, தமிழ் நாவல் உலகில் தனியிடம் பெற்று விட்டது.

மேலே குறிப்பிட்டவற்றைப் போலவே, ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்', ல.சா. ராமாமிருதத்தின் 'புத்ர', 'அபிதா', ச. கந்தசாமியின் 'சாயாவனம்', ஆ. மாதவனின் 'புனலும் மணலும்', எம். எஸ். கலியாண சுந்தரத்தின் 'இருபது வருஷங்கள்', ஆர். விட்டல் ராவின் 'போக்கிடம்' ஆகியன தனித் தன்மை வாய்ந்த சிறந்த நாவல்கள்.

பெண் எழுத்தாளர்கள்

அநுத்தமாவைத் தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் (Jane Austin) என்பர். மனத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுபவர் ராஜம் கிருஷ்ணன். இவர் எழுதி ஆனந்தவிகடன் போட்டியில் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசு பெற்ற 'மலர்கள்', 'குறிஞ்சித்தேன்' மிகவும் சிறந்த நாவல்களாகும். இவரது 'வளைக்கரம்' நாவல் சோவியத்லாந்து நேரு பரிசையும், 'வேருக்கு நீர்' 1973 இல் சாகித்திய அகாதெமிப் பரிசையும், 'கரிப்பு மணிகள்' 1980 இல் இலக்கியச் சிந்தனையின் பரிசையும் பெற்றன. மறைந்த ராஜம் ராமமூர்த்தி நல்ல நாவல்களைக் குமுதத்தில் எழுதியுள்ளார். வசுமதி ராமசாமி 'காப்டன் கல்யாணம்' எனும் நாவலை எழுதியவர். அந்நாளில் புகழ் பெற்றவர் 'லக்ஷ்மி'. இவர் எழுதிய 'பெண் மனம்', 'காஞ்சனையின் கனவு' 'மிதிலா விலாஸ்', 'அரக்கு மாளிகை' பெண் வாசகர்களையேயன்றி ஆண் வாசகர்களையும் கவர்ந்த புதினங்களாகும். சூடாமணி எழுதிய சிறந்த நாவல்கள் 'மனத்துக்கு இனியவள்'. 'விடிவை நோக்கி' என்பனவாகும். 'கிருஷ்ணா' எழுதிய 'ராஜி' உயரிய படைப்பாகும். விமலா ரமணி 'பாரிஜாதம்' என்னும் நாவல் எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு நவீனங்கள்

காண்டேகர் எழுதிய அழகு நாவல்களைத் தமிழில் தந்தவர் கா. ஸ்ரீ. ஸ்ரீ ஆவர். 'எரிநட்சத்திரம்', 'இருமனம், ---