பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

369


தமிழ் இந்நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் வளர்ந்து வளமான வாழ்வினைப் பெற்று விளங்குகிறது என்பதனைக் காண்போம்.

வாழ்க்கை வரலாற்று நூல்கள் (Biographies)

மேலை நாட்டு இலக்கியங்களிலே பாஸ்வெல் (Boswell) என்பார் டாக்டர் ஜான்சனை பற்றி எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாற்று நூலே சிறப்புடையதாகும். அது போன்று தமிழ்நாட்டிலும் வெவ்வேறு துறைகளிலும் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்கள் வாழ்க்கை வரலாறுகள், நூல்வழி வெளிவருவதாயிற்று. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட, தமக்கே இயல்பான எளிய நடையில் எழுதியுள்ளார். நபிநாயகம் வரலாற்றினை அப்துல் ரஹீம் அவர் கள் எழுதியுள்ளார். காந்தியண்ணல், கவிஞர் தாகூர், அறிஞர் பெர்னார்ட்ஷா ஆகியோர் வரலாறுகளைத் தெளிவான இனிமையான தமிழ் நடையில் நூல் வடிவாக டாக்டர் மு.வ. அவர்கள் தந்துள்ளார். புலவர் அரசு என்பவர் பல்வேறு தமிழ்ப் புலவர்கள் வரலாற்றினையும் நூல்களாக வடித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை மறைமலையடிகள் வரலாறு', 'திரு.வி.க. வரலாறு' என்பன. ம. பொ. சி. அவர்கள் வ.உ.சி. வரலாற்றைக் 'கப்பலோட்டிய தமிழ'னாகவும். கட்டபொம்முவின் வரலாற்றை 'வீரபாண்டிய கட்டபொம்ம'னாகவும் தந்துள்ளார். 'மருதிருவர்' வரலாற்றைத் தமிழ்ப் பேராசிரியர், சஞ்சீவி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார். புலித் தேவன் வாழ்க்கை வரலாறு, புரட்சி எழுத்தாளர் தமிழ்வாணனால் எழுதப்பட்டு, நூலாகி வந்துள்ளது. மு. நமசிவாயம் வழங்கிய 'காமராசர்' சமகாலத் தலைவரைப் பற்றிய சுவைமிகுந்த வாழ்க்கை வரலாறு ஆகும். சிதம்பர ரகுநாதன் தம் நண்பர் புதுமைப்