பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

தமிழ் இலக்கிய வரலாறு


பித்தனின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவைபடப் புனைந்துள்ளார். சிலம்புச் செல்வர் ம. பொ. சி. எழுதிச் சாகித்திய அகாதெமியின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்ற 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' குறிப்பிடத்தக்க நூலாகும். 'பெருந்தகை மு.வ.' என்று டாக்டர் சி. பா. ஒரு வாழ்க்கை வரலாற்று நூலினை வடித்துள்ளார். சுந்தா எழுதிய 'பொன்னியின் புதல்வர்' என்னும் கல்கியின் வாழ்க்கை வரலாறு புது முறையில் அமைந்து, வாழ்வு. இலக்கியம் ஆகிய இரண்டையும் உயரிய முறையில் அறிமுகம் செய்தது. அண்மையில் 'குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு' என்னும் நூலைப் பூவண்ணன் எழுதியுள்ளார்.

சுயசரிதம் (Autobiography)

காந்தியடிகள் குஜராத்தியில் எழுதிய சுயசரிதம், 'சத்திய சோதனை' என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார், கவிதையில் தம் சுயசரிதத்தைச் சுருங்கிய முறையில் எழுதியுள்ளார். வ. உ. சி. எழுதிய சுயசரிதையும் உண்டு. நாமக்கல் கவிஞர் உரை நடையில் தம் வரலாற்றை , 'என் கதை' என எழுதியுள்ளார். தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரின் 'என் சரித்திரம்' என்ற நூல் விரிந்த அளவில் உள்ளது. திரு. வி. க. வின் 'வாழ்க்கைக் குறிப்புகள் இத் துறையில் சிறந்த நூல் எனலாம்' முன்னாள் அமைச்சர் டி. எஸ். எஸ். ராஜன், 'நினைவு அலைகள்' என்னும் நூலில் தம் வாழ்க்கையினை வடித்துத் தந்திருக்கிறார். கலைஞர் மு. கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' சுவையான தன் வரலாற்று நூல். கண்ணதாசன் எழுதிய 'வனவாசம்' புதினம் போலப் படிக்கத்தக்க தன் வரலாற்று நூலாகும்.

இலக்கியத்துறை ஆராய்ச்சி நூல்கள்

இத்துறையில் இந்த நூற்றாண்டில் முன் நின்று வழிகாட்டியவர் மறைமலையடிகள் ஆவர். இவரது முல்லைப்