பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

தமிழ் இலக்கிய வரலாறு


நிலை' ஆழ்வார்கள் காலத்தைக் கணிக்க உதவுகிறது திரு. எஸ். ராமசாமி நாயுடு அவர்கள், 'தமிழிலக்கியம்' என்னும் நூலை மிகச் சுருங்கிய வகையில் எளிய முறையில் எழுதியுள்ளார்கள். திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலுள்ள இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இலங்கை வி. செல்வநாயகம் 'தமிழ் இலக்கிய வரலாறு-சுருக்கம்' எழுதியுள்ளார். தொல்காப்பியர் காலத்தைப்பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் க. வெள்ளை வாரணன் அவர்கள் அண்மையில் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதியுள்ளார். சமண, பௌத்த, வைணவ சமய நூல்களின் இலக்கிய வரலாற்றினை வரதராச ஐயரும், சைவ இலக்கிய வரலாற்றினை ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையும் எழுதியுள்ளனர். கி. பி. 250 - கி. பி. 600 காலப்பகுதிக்கும் 13, 14, 15, ஆம் நூற்றாண்டின் காலப்பகுதிக்கும் கல்வெட்டு ஆராய்ச்சிப் பேரறிஞர் திரு. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் சிறு சிறு நூல்கள் இயற்றியுள்ளார்.

தமிழ்ப் பேராசிரியர் சேசுதாஸ் அவர்கள், ஆங்கிலப் பேராசிரியையான தம் துணைவியாருடன் சேர்ந்து 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

பல்கலைச் செல்வர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் தாம் ஆற்றிய சொற்பொழிவுகளைத் திரட்டி, முறையாக ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதிய நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாய் வந்துள்ளது. டாக்டர் மு. வ. அவர்கள் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் சாகித்திய அகாதெமி மூலம் வெளிவந்துள்ளது. தமிழறிஞர் மு. அருணாசலம் 9 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை 'தமிழ் இலக்கிய வரலாறு' நூல்களைச் சிறப்பான முறையில் எழுதியுள்ளார்.