பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

375


சுற்றிய தமிழர் ஏ. கே. செட்டியாரும், சோம. இலக்குமணச் செட்டியாரும், சுத்தானந்த பாரதியாரும், உலகில் தாம் பார்த்த பல நாடுகளைப்பற்றிச் சுவைபட நூல்கள் எழுதியுள்ளனர். தம் வெளிநாட்டுப் பயணத்தை டாக்டர் மு.வ., கல்கி, தேவன், அ. மு. பரமசிவானந்தம், தனி நாயக அடிகள், ராமசாமி நாயடு முதலியோர் நூல்களால் எழுதியுள்ளனர். திரு. நெ. து. சுந்தரவடிவேலு, காந்திமதி, டி. கே. சண்முகம், டாக்டர் சிதம்பரநாதச் செட்டியார், சாவி, மணியன் ஆகியோர் தம் பிரயாண நினைவுகளைக் கட்டுரைகளாக வரைந்துள்ளனர். சோமு எழுதிய 'அக்கரைச் சீமையில்' எனும் பயண நூல் சாகித்திய அகாதெமியின் பரிசு பெற்றது. மணியன் 'இதயம் பேசுகிறது' என்னும் தலைப்பில் வழங்கிய பயணக் கட்டுரைகள், பல தொகுதிகளாக வெளிவந்து புகழடைந்துள்ளன.

மொழி நூல்

இது, இந்த நூற்றாண்டில் சிறப்பாக வளரும் துறையாகும். மாகறல் கார்த்திகேய முதலியார் முதன் முதல் மொழிநூற் கருத்துகளை எழுதியிருப்பினும், அவை விஞ்ஞான முறையோடு ஒட்டியமையாமையினால், இன்று வாழவில்லை. அடுத்து வடமொழி தென்மொழி இரண்டும் தெரிந்த டாக்டர் பி. எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் 'தமிழ் மொழி நூல்', எழுதினார். டாக்டர் மு.வ. அவர்களின் 'மொழி நூல்' 'மொழி வரலாறு', 'மொழியியற் கட்டுரைகள்' மேனாட்டு ஆராய்ச்சியாளரும் மதிக்கும்வண்ணம் திறம்பட அமைந்துள்ளன. தேவநேயப் பாவணர், மொழி நூல் சிலவற்றினை எழுதியுள்ளார். டாக்டர் சேதுப்பிள்ளை அவர்கள், 'சொல்லும் அவற்றின் குறிப்பீடும்' (Words and their Significance) என்ற நூலை எழுதியுள்ளார். 'சோமலெ'யின் 'செட்டி நாடும் தமிழும்' கிளைமொழி (Dialect) பற்றியதோர் ஆராய்ச்சி நூலாகும். டாக்டர் அகஸ்தியலிங்கம், 'உலக மொழிகள்' என்னும் மொழி வரலாற்று நூலினை எழுதியுள்ளார்.