பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்க்கை
1. ஐரோப்பியர் வருகை

கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்களாகிய போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் முதலியோர் இந்தியாவுக்கு, அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். ஆனால் ஐரோப்பியரின் தொடர்பினைச் சங்க காலத்திலேயே தமிழகம் பெற்றிருந்தது. யவனர் என வழங்கப்பட்ட ரோமரும் கிரேக்கரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருந்தனர். மதுரை, புகார் நகரங்களில் யவனர்கள் தங்கி வாணிகம் செய்தனர். யவனர்கள் தங்கிய பகுதி 'யவனச்சேரி' என அழைக்கப்பட்டது. யவன நாட்டின் கைவினைப் பொருள்கள் இங்கே இறக்குமதியாயின. தமிழ் நாட்டின் வாசனைப் பொருள்களும் பிறவும் யவன நாட்டுக்கு ஏற்றுமதியாயின.

கி. மு. 22 இல் மதுரையிலிருந்து ஆண்ட பாண்டியன் ஒருவன், ரோம்நாட்டு அரசன் அகஸ்டஸ் சீசரின் அவைக்குத் தன் தூதரை அனுப்பியமை தெரிகிறது. யவன நாட்டுச் செல்வம் நம் நாட்டில் வந்து குவிவதாகப் பிளினி என்பார் குறை கூறியிருந்தார். கி.பி. 47 இல், ஹிப்பாலஸ் என்பார் இந்தியப் பெருங்கடலில் வீசும் வடகிழக்குப் பருவக் காற்றையும், தென்மேற்குப் பருவக் காற்றையும் கண்டு பிடித்தார். அக்காற்று வீசும் பருவத்தில் கடற்பயணம் மேற்கொண்டால் விரைவாகத் தமிழகத்தை அடையலாம் என்பதை யவனர் அறிந்திருந்தனர். அதனால், யவனரின் வருகை மிகுந்தது, வாணிபம் வளர்ந்தது.