பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

தமிழ் இலக்கிய வரலாறு


கடலாதிக்கம் ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்டது. 'ஆங்கிலேயக் கம்பெனி வாணிபம்' என்பது மாறி, 'ஆங்கிலேயக் கம்பெனி அரசாங்கம்' என்பது தோன்றியது. அகண்ட இந்தியா முழுவதுமே அதற்கு அடிமைப்பட்டது. கி.பி. 1858 இல் இங்கிலாந்து அரசு, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பைக் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து தானே ஏற்றுக் கொண்டது. அது முதல் கி.பி. 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14 ஆம் நாள் வரை அந்த ஆட்சி நிலைத்து நின்றது.

ஐரோப்பியரின் வருகை, அரசியலில் பெரும் மாற்றம் செய்தது போலவே மொழியிலும் இலக்கியத்திலும் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது. ஐரோப்பாவின் தாக்கம், அதன் பின் எழுந்த பெரும்பாலான இலக்கியத்தில் இருக்கக் காணலாம். அடிமைப்படுத்தியவர்களின் ஆட்சியில், தமிழ் மொழியும் இலக்கியமும் சில புதுமைகள் பெற்று, புதுத் துறைகள் பெற்று வளம் பெற்றதை மறுக்க முடியாது

2. அச்சு இயந்திரத்தின் தோற்றம்

பொதுவாக உலகம் முழுவதிலும் கல்வி என்பது செல்வம் மிக்கவர்களின் தனியுரிமையாக இருந்து வந்தது. நடுத்தர மக்களும், கடைநிலை மக்களும், பெரும் பொருள் செலவிட்டுத் தம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தரமுடியவில்லை. அதனால் அவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு அற்றவர்களாகவே இருந்தனர். செல்வம் மிக்கவரிடம் சிறைப்பட்ட கல்வியினால் கல்வியில் புதுமை உண்டாகவில்லை. புதிய இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றவில்லை. அச்சுக்கலை தோன்றிய பின்னரே, அச்சு இயந்திரங்கள் நூற்றுக்கணக்கான படிகளை எளிதில் அச்சிட்டு மலிவு விலைக்கு விற்ற பின்னரே, எளிய மக்களும் அவற்றை வாங்கிப் படித்துப் பயனடையத் தொடங்கினர். உலக மொழிகள் யாவுமே, அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்புக்