பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

தமிழ் இலக்கிய வரலாறு


முழுதும் பரப்பிய சுப்பிரமணிய சிவா, வெள்ளையனுக்குப் போட்டியாகக் கப்பல் செலுத்திய கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரம் பிள்ளை , சீனிவாச ஐயங்கார், மூதறிஞர் இராஜாஜி, வைக்கம் வீரர் ஈ.வே. இராமசாமிப் பெரியார், தமிழ்த் தென்றல் திரு. வி. க., முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி முதலியோர் இந்திய தேசியக் காங்கிரஸின் போராட்டங்களில் ஈடுபட்டு விடுதலைப் போராம் பெருந்தீயில் நெய் சொரிந்தனர். 1887 ஆம் ஆண்டு காங்கிரஸின் மூன்றாம் மாநாடு சென்னையில் நடைபெற்றது. சென்னையிலிருந்து வெளியான 'இந்து' என்னும் ஆங்கில நாளேடும், 'சுதேச மித்திரன்' என்னும் தமிழ் நாளோடும் சுதந்திரப் போருக்குத் துணை நின்றன, 'வந்தே மாதரம்' என்னும் முழக்கம் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலும் எதிரொலித்தது.

பஞ்சாப், வங்காளம் போன்ற மாநிலங்களில் சுதந்திரப் போரில் பயங்கரவாதம் இடம்பெற்று, வன்முறைச் செயல்கள் தலை தூக்கின. அவ் வன்முறை இயக்கத்தின் செல்வாக்குத் தமிழ்நாட்டிலும் மெல்ல நுழைந்தது. குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் அதற்கு ஆதரவு கிடைத்தது. அதன் விளைவாக வாஞ்சி என்னும் லாலிபன், மணியாச்சி ரயில் சந்திப்பில் திருநெல்வேலிக் கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். வாஞ்சியின் சட்டைப் பையிலிருந்த கடிதத்தில் "ஜார்ஜைக் கொல்வதாக நாங்கள் மதறாசிகள் 3000 பேர் சபதம் பூண்டுள்ளோம். அவர்கள் அனைவரிலும் பெரியோனான நான் அதைத் தெரிவிக்கும் வகையில் இன்று இச்செயலை (ஆஷ் கொலை)ச் செய்தேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இக் கொலை வழக்கில் நீலகண்ட பிரமச்சாரி முதலிய 14 பேர் தண்டனை பெற்றனர். தீவிரவாதிகளின் வன்முறை இயக்கம் வெள்ளையரால் அடக்கி ஒடுக்கப்பட்டது.

தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில், தன்னாட்சி இயக்கம் (Home Rule), ஒத்துழையாமை இயக்கம், கிலாபத்