பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கை

391


இயக்கம் ஆகியவை தோன்றின. அப்போது அன்னி பெஸண்ட் அம்மையார் தமிழ்நாட்டில் தேசிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். தமது. 'புதிய இந்தியா' (New India) பத்திரிகை மூலம் விடுதலைக் கனலைப் பரப்பினார்.

1930 இல் காந்தி அடிகள் வடநாட்டில் உப்புச்சத்தியாக்கிரகம் தொடங்கினார். அவரது 'தண்டியாத்திரை' உலகப் புகழ் பெற்றது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் தமிழ்த் தலைவர்கள் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இராஜாஜி, டி .எஸ். எஸ். ராஜன், சர்தார் வேதரத்தினம், திருமதி லட்சுமிபதி முதலானோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். நாமக்கல் கவிஞரின் 'கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் ஒன்று வருகுது' என்னும் புகழ் வாய்ந்த பாடல், இந்தச் சத்தியாக்கிரகத் தொண்டர்களுக்காக வழிநடைப் பாடலாக எழுதப்பட்டதாகும்.

இந்தியர்களின் விடுதலைக் கிளர்ச்சியின் பலனாக ஆங்கில அரசு, ஆட்சி முறையில் சில புது முறைகளைப் புகுத்தியது. அதன்படி 1935 இல் கொண்டுவரப்பட்டதே மாகாண சுய ஆட்சித் திட்டம். அதன்படி 1936 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு, பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசை நிறுவியது. சென்னையில் இராஜாஜி தலைமையில் முதன் முதலாக காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது.

இந்நிலையில் இரண்டாவது உலகப்போர் மூண்டது . இதில் இந்தியாவையும் வெள்ளையரசு ஈடுபடுத்தியது. இப்போருக்கு உதவுவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்தது. அதனால் காங்கிரஸ் அமைச்சரவைகள் 1942 இல் பதவி விலகின. வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து இதே ஆண்டு நாடு முழுவதிலும் ஒரு பெரும் புரட்சி எழுந்தது. இதனை 1942 புரட்சி எனக் குறிப்பிடுவர். இப் புரட்சியில் தமிழ் நாடும் பங்கு கொண்டது. அதனால் பல தலைவர்கள் சிறைப்பட்டார்கள். 1945இல் அனைவரும் விடுதலை பெற்றனர்.