பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழ் இலக்கிய வரலாறு


சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன இச் சங்கம் மருவிய காலத்தில் எழுந்தன என்பர். இவற்றுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைச் சங்ககால இலக்கியம் என்றும் சிலர் கூறுவர். ஆனால், அவ்வாறு கொள்வதற்குச் சில இடர்ப்பாடுகளையும் காட்டுவர். இந்நூல்கள் சங்ககால நூல்களினின்றும், கூறும் பொருளாலும், அமைந்திருக்கும் நடையாலும் வேறுபட்டிருக்கின்றன என்பர். எனவே, இப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களென்று கொள்வர். “அந்நூல்களெல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை. அன்றியும், அவை எந்த நூற்றாண்டில் தோன்றியிருத்தல் கூடும் என்பதும் உய்த்துணர்ந்து கூற வேண்டிய நிலையில்தான் உள்ளது."[1]

'அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
அறம்பொரு ளின்பம் அடுக்கி யவ்வகைத்

திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்'.
- பன்னிரு பாட்டியல், மேற்கோள், 133

இதற்கு ஏற்ப, குறைந்த அடிகளையுடைய செய்யுள்களால், வெண்பா யாப்பிற்றாய், அறம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப்பொருள்களையும் கூறுவதனைக் கீழ்க் கணக்கு நூல்கள் எனலாம். 'கணக்கு' என்ற சொல் முதலில் இலக்கியத்திற்கு வழங்கியது. அக் காலத்தில் கணக்காயர் என்ற சொல்லே இலக்கிய ஆசிரியர் என்ற பொருளைத் தந்ததை நாம் அறிகிறோம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உளது:


  1. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார். தமிழ் இலக்கிய வரலாறு 1, ப. 28.