பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

திருந்தா மொழிகள் என்பர்; அவை ஏட்டு வழக்குப் பெறாமல் பேச்சு வழக்கு மட்டும் பெற்றுள்ளன. அவை துதம், கோதம், கோண்ட், கூ, ஒரோஒன், ராஜ்மகால் முதலியனவாம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு முதலியனவற்றைத் திருந்திய மொழி என்பர். இவை ஏட்டு வழக்கும் பெற்றுள்ளன. இவற்றுள் தமிழ் மொழியே பழந்திராவிடக் கூறுகளை மிகுதியாய்ப் பெற்றுள்ளது.

சிறப்புக் கூறுகள்

தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் பிறமொழித் தாக்குதலின்றித் தனித்து வளர்ந்தன. தமிழ் தனக்கென ஓர் இலக்கிய மரபையும், இலக்கண அமைப்பையும் கொண்டு விளங்குகிறது. கிரேக்கம், இலத்தீன், வடமொழி முதலியவற்றைப் போலத் தமிழ் பழம்பெரும் மொழியாகும், ஆனால் அவற்றைப் போலத் தமிழ் இலக்கிய வளத்தோடு மட்டும் நிற்கவில்லை; பேச்சு வழக்கும், இலக்கியச் சிறப்பும் கொண்டு இன்றும் உயர் தனிச்செம்மொழியாக விளங்குகிறது.

தமிழிலக்கியம் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்டது. தென்னிந்தியாவில் ஏனைய திராவிட இலக்கியங்கள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தோன்றின. தமிழோ, கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலேயே செப்பம் பெற்ற இலக்கிய இலக்கணங்களைப் பெற்றிருந்தது. ஏனைய திராவிட மொழிகள் வடமொழியின் தாக்குதலுக்கு ஆட்பட்டுத் தம் தனித் தன்மையைப் பெரும்பாலும் இழந்துவிட்டன. தமிழ் ஒன்றே அதன் ஆதிக்கத்துக்கு உட்படாமல் தனித்து வளர்ந்து வந்துள்ளது எனலாம். எழுத்துக்கும். சொல்லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக்கணம் பெற்றுத் திகழ்கிறது. தமிழ் பண்டைக் காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே லெமூரியா என்ற பகுதியும் தமிழ் நாட்டோடு இணைந்த பெரு நிலப்பரப்பாக இருந்து வந்தது. கடற்கோளால் அப்பகுதி அழிந்தபோது பல நூல்களும் அழிந்து விட்டன. இன்று கிடைக்கும் இலக்கியங்கள், எட்டுத் தொகையும், பத்துப்பாட்டுமேயாகும். தொல்காப்பியம் அவற்றுக்கு முன் தோன்றியதாகும். இவற்றைச் சங்க இலக்கியம் என்பர். சங்ககாலமே இலக்கிய வரலாற்றின் பொற்காலமாகும்.